பொது

எதிர்புறம் வாகனத்தை செலுத்திய இரு ஆடவர்கள் கைது

27/12/2024 05:33 PM

டமான்சாரா, 27 டிசம்பர் (பெர்னாமா) --   டமான்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலையின் 16-ஆவது கிலோமீட்டரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, எதிர்புரம் வாகனத்தை செலுத்திய இரு ஆடவர்களை 35 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.

நேற்று காலை 11.32 மணியளவில் போலீஸ் ரோந்து காரையும், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மோதிவிட்டு, Proton Satria காரில் தப்பிக்க முயன்ற இரு சந்தேக நபர்களை ரோந்து போலிசார் துரத்திச் சென்றதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிசாம் ஜாஃபார் கூறினார்.

30 மற்றும் 29 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும் ஜாலான் PJU 1a/1 அராAra டமான்சாராவில் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி ஷாருல்நிசாம் ஜாஃபார் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவர்களின் காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 12.87 கிராம் எடையுள்ள ஷாபு என நம்பப்படும் போதைப்பொருளும் மின் அதிர்வலை ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

காரை ஓட்டிச் சென்ற சந்தேக நபர், ஏற்கனவே 11 குற்றப் பதிவுகளையும் போதைப்பொருள் சார்ந்த ஐந்து குற்றப் பதிவுகளையும் கொண்டுள்ள வேளையில், மற்றொருவரும் குற்றப் பின்னணியைக் கொண்டுள்ளார்.

இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 307/186/279, 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் மற்றும் 1987-ஆம் ஆன்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 42 உட்பிரிவு 1-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)