செதாபாக் ஜெயா, 27 டிசம்பர் (பெர்னாமா) - Ziarah MADANI@Finas உதவி திட்டத்தின் வழி, அடுத்தாண்டு கலைத்துறையில் உள்ள 100 பேருக்கு உதவிகள் வழங்க மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான, FINAS இலக்கு கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் இவ்வாண்டு டிசம்பர் 27ஆம் தேதி வரை கலைத்துறையில் உள்ள 48 பேர் உதவிப் பெற்றுள்ளதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.
"நாங்கள் உண்மையில் இதற்காகத் தனி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை. இது ஹவானா நிதியிலிருந்து வேறுபட்டது. ஆனால் இது ஃபினாஸ்சின் முன்முயற்சியாகும், இதில் நாங்கள் வியூக பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், " என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில், மூத்த கலைஞரும் நகைச்சுவை நடிகருமான சத்யா பெரியசாமியை சந்தித்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே, Ziarah MADANI@Finas உதவி திட்டத்தின் வழி, 'Pi Mai Pi Mai Tang Tu' எனும் தொலைக்காட்சி நாடகம் மூலம் மலேசிய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் சத்தியாவுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது.
அண்மையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு வழங்கப்பட்ட இந்த உதவித் தொகை, மருத்துவ செலவை ஈடுகட்ட உதவும் என்று 60 வயதுடைய சத்தியா தெரிவித்தார்.
''மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால், நம்மை அடிக்கடி யாரும் வந்து சந்திக்க மாட்டார்கள். இப்போது, நமது நலன் கருதி சந்திக்கும் போது, நாம் வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது. என்னுடன் இரண்டு தோழர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். எனக்காக உதவி புரிவது என்பது பெரியது. அதனால், மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், '' என்றார் அவர்.
42 ஆண்டுகளாக கலைத்துறையில் மிளிர்ந்து வரும் சத்யா, தற்போது 'கிறிஸ்துமஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளதாகவும் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
''வசனங்களைப் பேசிவதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், நடக்கதான் முடியவில்லை. அது ஒரு சிக்கல் அல்ல. இன்னும் ஒரு மாதத்தில் சரியாகி வந்து விடுவேன்.கவலை வேண்டாம்,'' என்றார் அவர்.
இயல்பான நடிப்பு திறனால் மக்களின் கவனத்தை ஈர்த்த சத்தியாவின் உடல்நிலை தற்போது சீராகி வருகிறது.
அதனால், தன்னால் இயன்ற வரை கலைத்துறையில் தொடர்ந்து செயலாற்ற விரும்புவதாக சத்தியா கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)