சிலாங்கூர், 28 டிசம்பர் (பெர்னாமா) -- 12 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஹெரொயின் ரக போதைப் பொருளை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை கைப்பற்றி இருக்கிறது.
பறிமுதல் செய்யப்பட்ட அப்போதைப் பொருளை சுமார் 900 போதைப் பித்தர்கள் பயன்படுத்தலாம் என்று குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ கௌ கொக் சின் இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்நாட்டைச் சேர்ந்த 48 வயதான இந்திய ஆடவர் செலுத்தி வந்த Honda City ரக காரைத் தடுத்து சோதனையிட்டதில், இப்போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக டத்தோ ஶ்ரீ கௌ அவ்வறிக்கையில் விவரித்திருந்தார்.
அக்காரை சோதனையிட்டபோது சுமார் 7.4 கிலோ கிராம் எடைக் கொண்ட ஹெரொயின் ரக போதைப் பொருள் 20 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து சனிக்கிழமை சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள ஓர் இல்லத்தை சோதனையிட்டபோது சுமார் 5.9 கிலோ கிராம் எடையில்16 துண்டுகளாக இருந்த ஹெரொயின் போதைப் பொருளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவ்விரு சோதனை நடவடிக்கைகளையும் சேர்த்து மொத்தம் 13.3 கிலோ கிராம் எடையிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆடவருக்கு முன்னதாக, 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் ஒரு குற்றப்பதிவும் உள்ளது.
ஆயினும், அவ்வாரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உட்கொள்ளாதது உறுதிப்படுத்தப்பட்டது.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 39B-இன் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)