பொது

புத்தாண்டு முதல் தேதியில் இரயில் & பேருந்து சேவையின் இயக்க நேரம் பின்னிரவு 3 வரை நீட்டிப்பு

28/12/2024 05:42 PM

கோலாலம்பூர், 28 டிசம்பர் (பெர்னாமா) --   அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பேருந்து சேவைக்கான வழிதடங்கள் பின்னிரவு மணி 3.30 மணி வரை செயல்படும் வேளையில், இதர இரயில் மற்றும் பேருந்து சேவையின் இயக்க நேரத்தை பின்னிரவு மணி மூன்று வரை நீட்டிப்பதாக RAPID KL அறிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டை வரவேற்கும் கொண்டாட்டத்தில் நகர்ப்புறவாசிகள் பங்கேற்பதை உறுதி செய்வதே அதன் நோக்கம் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் Prasarana Malaysia தெரிவித்திருக்கிறது.

18 இரயில் நிலையங்கள், நான்கு பேருந்து நிலையங்கள் ஆகியவற்றுடன் KLCC, Masjid Jamek, Bukit Bintang மற்றும் Tun Razak உள்ளிட்ட 20 முக்கிய மற்றும் இடைநிலை பேருந்து வழித்தடங்களை உட்படுத்தியும் இந்த அறிவிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மணி 7.30-க்கு தொடங்கி அனைத்து இரயில் பாதைகளின் பயண சேவைக்கான இடைவெளி மேம்படுத்தப்படும்.

நகர மையத்தைச் சுற்றியுள்ள கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துக் கொள்வதை எளிதாக்கும் அதே வேளையில், நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லும் பயணத்தின் வசதியையும் சுமூகமாக்குவதை இது உறுதிப்படுத்துகிறது.

புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளின் சுமூகமான பயணத்தைக் கருத்தில் கொண்டு உதவி போலீசார், செயலாக்கப் பணியாளர்கள் ஆகியோரை உட்படுத்தி மொத்தம் ஈராயிரத்து 731 Rapid KL முன்னிலைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)