கோலாலம்பூர், 28 டிசம்பர் (பெர்னாமா) -- ஒவ்வொரு ஆண்டும், மலேசியாவிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரைக்காக சபரிமலைக்குச் செல்கின்றனர்.
48 முதல் 60 நாள்கள் வரை கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இருமுடிகளை ஏந்திக் கொண்டு இந்தியா, கேரளாவிற்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, விமான நிலையத்தில் பிரத்தியேக வழித்தடங்களை அமைத்து கொடுக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விரவகாரம் குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசியப் போது அவர்கள் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கியதாக குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
''உடனடியாக நேற்று ஒரு முடிவு செய்தனர். மலேசிய விமான நிலையத்திலிருந்து அழைத்து அனைத்து தகவல்களையும் பெற்றுவிட்டனர். அடுத்தக்கட்டமாக, விமான நிலையத்தில் சிறப்பு முகப்புகளை திறக்க வேண்டும். ஏனெனில், பக்தர்கள் காலில் காலணிகள் இல்லாமல் வருவார்கள். எனவே, அவர்களுக்கான மரியாதை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கென ஒரு பிரத்தியேக முகப்பை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்'', என்று அவர் கூறினார்.
மேலும், யாத்திரை செல்லும் பெரும்பான்மையான பக்தர்கள் முதியவர்களாக இருப்பதால் அவர்களின் பயணம் பாதுகாப்பானதாக அமைய கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கினார்.
''அதில் பார்த்தோமானால் பெரும்பான்மையானவர்கள் முதியவர்களாக இருக்கின்றனர். சிலர் ஆசைப்பட்டிருப்பர் இந்த நேர்த்திக் கடனை மேற்கொள்ள வேண்டும் என்று. ஆக, இந்த ஏற்பாடுகள் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்'', என்றார் குணராஜ் ஜோர்ஜ்.
இதனிடையே, இவ்விவகாரத்திற்குச் சுமூக தீர்வை வழங்க போக்குவரத்து அமைச்சு, MALAYSIA AIRPORT குழும நிறுவனம், MAHB, மலேசிய குடிநுழைவுத் துறை, மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் அசியா மற்றும் பாதிக் ஹெர் நிறுவனங்களின் ஒத்துழைப்பைத் தாம் நாடுவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)