பொது

TEMPUR TEKNIKAL சோதனை நடவடிக்கை; 5,306 ஜேபிஜே சம்மன்கள் வெளியிடல்

29/12/2024 04:57 PM

சிரம்பான், 29 டிசம்பர் (பெர்னாமா) - வணிக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வாகனங்களை உட்படுத்தி ஐந்து நாள்களுக்கு நடத்தப்பட்ட Tempur Teknikal சோதனை நடவடிக்கையில் சாலை போக்குவரத்து துறை ஜேபிஜே 5,306 சம்மன்களை வெளியிட்டது.

இந்நடவடிக்கையில் சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில், சில வாகனங்களை பரிசோதனை செய்யவும் சில வாகனமோட்டிகளை விசாரணை செய்யவும் அறிவிக்கை வெளியிடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ ஜனா சந்திரன் முனியன் தெரிவித்தார்.

1,787 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாலையில் செல்லும் போது முறையற்ற டயர்கள் பயன்படுத்துவது, லாரிகள் மற்றும் கனரக லாரிகள் உட்பட அதிகமான வணிக வாகன ஓட்டுநர்கள் செய்யும் குற்றங்களில் ஒன்றாகும்.

வாகனத்தின் பிரேக்குகள் மற்றும் டயர்கள் சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்வதில் இந்நடவடிக்கை கவனம் செலுத்தியதாக அவர் கூறினார்.

இதனிடையே, குறிப்பாக பண்டிகை காலங்களில், வணிகம், அதிக சுமை, தொழில்நுட்பம், ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்களை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ஜேபிஜே பணிக்கு அமர்த்தியதாக ஜனா சந்திரன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)