பொது

தைவான்  பெண்ணின் காரை சேதப்படுத்திய பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்

29/12/2024 04:49 PM

ஜோகூர் பாரு, 29 டிசம்பர் (பெர்னாமா) - கடந்த சனிக்கிழமை, ஜாலான் பந்தாயில் தைவான் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் காரை சேதப்படுத்தியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அக்குற்றத்திற்காக ஆறாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட வேளையில், அபராதத்தைச் செலுத்த தவறினால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இன்று மாஜிஸ்திரேட் ஹிடாயாத்துல் ஷுஹாடா ஷம்சுடின் முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது முஹமட் நஸ்ரி எலியாஸ் அதனை ஒப்புக் கொண்டார்.

முஹமட் நஸ்ரி, பாதிக்கப்பட்டவரின் PEUGEOT ரக காரின் கண்ணாடியை உடைத்தும் காரில் கீறலை ஏற்படுத்தியும் அவருக்கு ஐந்தாயிரம் ரிங்கிட் மதிப்பில் சேதத்தை ஏற்பட்டித்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த டிசம்பர் 20ஆம் தேதி ஜாலான் பந்தாயிலிருந்து இருந்து பெர்மாஸ் ஜெயா  நோக்கிச் செல்லும் 0.3ஆவது கிலோ மீட்டரில் இச்சம்பவம் நடந்தது.

குறைந்தபட்சம் ஓர் ஆண்டு மற்றும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 427-இன் கீழ் முஹமட் நஸ்ரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

முன்னதாக, இச்சம்பவம் தொடர்பிலான காணொளி X வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)