கோலாலம்பூர், 29 டிசம்பர் (பெர்னாமா) - கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் உள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில தனிநபர் குழுவொன்று வினோதமான முறையில் நடந்து கொண்டது தொடர்பில் தமது தரப்பு புகாரினைப் பெற்றுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
சம்பந்தப்பட்ட குழுவினரின் நடவடிக்கை குறித்த காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அப்புகாரினை செய்துள்ளதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் லஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை மணி 10.00 அளவில் நடந்ததாக நம்பப்படும் இச்சம்பவம் குறித்த காணொளி, அதே நாளில் மாலையில் பரவலாகப் பகிரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை மணி 4.23-க்கு பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததாகக் கூறிய அவர், மேல் விசாரணைக்காக கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மதத் துறை ஜாவியின் கவனத்திற்கு இவ்வழக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
23 விநாடிகள் கொண்ட அக்காணொளி சனிக்கிழமை பரவலாகப் பகிரப்பட்டது.
ஸ்தாப்பாக், டானாவ் கோத்தாவில் உள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் ஒரு குழுவினர் வினோதமான முறையில் நடந்து கொள்வது அக்காணொளியில் பதிவாகி இருப்பதுடன் அச்செயல் குறிப்பாக இஸ்லாமியர்களிடையே பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)