விளையாட்டு

12 தங்கப்பதக்கங்களை வென்று சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த மலேசிய சிலம்ப அணி 

30/12/2024 06:06 PM

ஜார்ஜ்டவுன், 30 டிசம்பர் (பெர்னாமா) -- கத்தாரில் நடைபெற்ற ஆசிய பொது சிலம்ப வெற்றியாளர் போட்டியில் மகுடம் சூடிய மலேசிய சிலம்ப அணி சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில் பங்கேற்ற மாணவர்களின் கடின உழைப்பும் திறமையும் இந்த வெற்றியை அடைய வழிவகுத்ததாக மலேசிய சிலம்பம் சங்கம் கூறியது.

இப்போட்டியில் மலேசியா உட்பட இந்தியா, கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசு, சவூதி அரேபியா, ஒமான் ஆகிய ஆறு நாடுகள் களமிறங்கின.

அனுபவம் வாய்ந்த நாடுகளுக்கு மத்தியில் சிறந்த திறனை வெளிப்படுத்தி 12 தங்கப்பதங்களை வென்றது, சமுதாயத்திற்கும் மட்டுமல்லாது மலேசியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பதாக மலேசிய சிலம்பம் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஸ் தெரிவித்திருக்கின்றார்.

''குறைந்தது ஆறு தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் பயணத்தை தொடங்கினோம். எனினும், 12 பிரிவுகளிலும் வெற்றிப் பெற்று தங்கம் வென்றது எதிர்பாரா ஒரு விஷயம். இந்த மாணவர்கள் சரியாக போட்டியில் ஈடுபட்டனர். கடுமையான போட்டியை வெளிப்படுத்தினர். அதனால், இன்று நல்ல முடிவுடன் நாடு திரும்பியுள்ளோம். மலேசியா வெற்றியாளர் ஆனது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார் டாக்டர் எம். சுரேஸ்.

இதனிடையே, இந்தப் போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டாளர்கள் தங்களது மகிழ்ச்சியான தருணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

''அங்குள்ள தொழில்நுட்பம், உபகரணங்கள், விதிமுறைகள் ஆகியவை சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரே நாளில் அதனைப் பழக்கபடுத்திக் கொள்வதில் சற்று சவாலை எதிர்நோக்கினோம். அதோடு, தனிப்பிரிவு போட்டியில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அதனையும் பழக்கப்படுத்திக் கொண்டோம். கடின உழைப்பையும் போட்டியையும் வெளிப்படுத்தினோம். இந்த முறை அனுபவம் சிறப்பாக இருந்தது. புதிய இடம். புதிய அனுபவம். கடினமாகத்தான் இருந்தது. இருந்தாலும், சிறப்பாக இருந்தது,'' என்று அவர்கள் கூறினர்

இன்று கத்தாரில் இருந்து புறப்பட்டு அவர்கள் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)