ஜோகூர் பாரு, 30 டிசம்பர் (பெர்னாமா) - கடந்த வெள்ளிக்கிழமை கவனக் குறைவாக வாகனத்தைச் செலுத்தி சாலையைப் பயன்படுத்துவோரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த குற்றத்திற்காக,
கடைப் பணியாளர் ஒருவருக்குப் பத்து நாள்கள் சிறைத் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
மாஜிஸ்திரேட், முகமட் இஜ்ஹாம் முகமட் அலியாஸ் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 28 வயதுடைய முஹமட் சப்பிக் ஜெஃப்ரி என்பவர் அதை ஒப்புக் கொண்ட பின்னர் அவருக்கு அத்தண்டனை விதிக்கப்பட்டது.
விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை முஹமட் சப்பிக் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும், அவ்வாடவர் ஐந்தாண்டுகளுக்கு வாகன ஓட்டுரிமத்தை வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதி இழந்துள்ளார்.
ஒருவேளை அவரிடம் மாதிரி ஓட்டுரிமம் இருந்தால் அதுவும் ரத்து செய்யப்படும்.
டிசம்பர் 27ஆம் தேதி, ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் லிங்காரன் டாலாம் சாலையின் சிவப்பு நிற சமிஞ்சை விளக்கின் போது வாகனத்தை நிறுத்தாமல் அச்சாலையைப் பயன்படுத்துவோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தைச் செலுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1987ஆம் அண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் செக்ஷன் 42 உட்பிரிவு ஒன்றின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)