உலகம்

2024-இல் கவனம் ஈர்த்த எதிர்ப்பாரா உலக நிகழ்வுகளும் சம்பவங்களும்

30/12/2024 08:51 PM

கோலாலம்பூர், 30 டிசம்பர் (பெர்னாமா) --   உலக மக்களில் பெரும்பாலானோர் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த 2024-ஆம் ஆண்டு, எதிர்ப்பாராத பல நிகழ்வுகளையும் சம்பவங்களையும் ஏற்று நடத்தி தற்போது விடைப்பெறும் தருணத்தில் உள்ளது.

உலக நாடுகளில் ஏற்பட்ட பேரிடர்கள், வீதிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள், நாடுகளுக்கு இடையிலான போர் மற்றும் கருத்து மோதல்கள் என பல முக்கிய பதிவுகள் 2024-ஆம் ஆண்டுக்கான உலகச் செய்திகளில் அங்கம் வகித்தன.

இயற்கை சீற்றத்தின் ஆதிக்கத்தோடு 2024-ஆம் ஆண்டு தொடக்கம் கண்டது.

ஜனவரி முதலாம் தேதி, ஜப்பானில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 230-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கடந்த எட்டு ஆண்டுகளில் ஜப்பான் கண்டிராத இந்நிலநடுக்கத்தில் 44,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில், ஜப்பானின் மேற்கு கடற்கரை மற்றும் அண்டை நாடான தென் கொரியாவில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை அலை எழுந்தது.

இதனிடையே, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஜப்பானியக் கடலோர பாதுகாப்புப்படை விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 379 பயணிகள் உட்பட பணியாளர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எனினும், கடலோர பாதுகாப்புப்படை விமானத்தின் பணியாளர்கள் ஐவர் பறிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மார்ச் 26-ஆம் தேதி அதிகாலை, அமெரிக்கா, பல்திமோர் நகரில் கொள்கலன் கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து Francis Scott Key பாலத்தை மோதி விபத்துக்குள்ளானதில், படாப்ஸ்கோ ஆற்றில் மூழ்கிய ஆறு தொழிலாளர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டள்ள நிலையில் எஞ்சிய நால்வர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

14 மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் காசாவில் குறைந்தது 70 விழுக்காட்டு பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இவ்வாண்டு அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கி லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது துவங்கிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி ஈரான் இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

எனினும், அந்நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்தும்படி மலேசியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

2018-இல் ரத்து செய்யப்பட்ட அரசாங்கப் பணிகளுக்கான ஒதுக்கீட்டை நீதிமன்றம் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்காளதேசத்தில் மாணவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தினால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா 15 ஆண்டுகால ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி, கென்யாவில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் பலியான வேளையில், 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகினர்.

தங்கும் வசதி கொண்ட பள்ளிகள், கல்வி அமைச்சு பரிந்துரைத்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அந்நாட்டின் துணை அதிபர் ரிகாதி கச்சகுவா வலியுறுத்தினார்.

கென்யாவில் தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் தீ விபத்து நிகழ்வது வழக்கமாகும்.

இதனிடையே, மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கையின் வளமான எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக செப்டம்பர் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் இலங்கையின் ஒன்பதாவது அதிபராக தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திசநாயகே வெற்றி பெற்றார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில், டிரம்ப்பிற்கும் துணை அதிபர் கமலா ஹரிசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

நவம்பர் மாதம் முதலாம் தேதி, ஸ்பெயினில் நிகழ்ந்த திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158-ஆக பதிவு செய்யப்பட்டது

கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை ஸ்பெயின் சந்தித்துள்ளது.

இதனிடையே, இவ்வாண்டு முழுவதும் நிலையற்ற வானிலையினால் பிரசில், ஈராக், கென்யா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஓமான், சீனா, டெக்சாஸ், பிலிபைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் Fengal புயலினால் ஏற்பட்ட மழை மற்றும் நிலச்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழந்தனர்.

பெரிய பாறாங்கல் ஒன்று சறுக்கி வீடுகள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

மற்றொரு நிலவரத்தில், தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய இராணுவ ஆட்சியை அறிவித்த அதன் அதிபர் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யூன் தமது அதிகாரப்பூர்வ கடமைகளை மேற்கொள்வதில் இருந்து இடைநீக்கம் செய்ய, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் ஹன் டக் சூ அந்நாட்டின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அரசியல் ரீதியிலான சில நெருக்கடிகளை அந்நாடு சந்தித்து வருகின்றது.

கடந்த வாரம் 25-ஆம் தேதி, அசர்பைஜான்  தலைநகம் பக்குவிலிருந்து ரஷ்ய நகரம் Grozny-க்கு, 67 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த, அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 42 பேர் பலியாகினர்.

ரஷ்ய எல்லையை நோக்கிய பயணித்த அந்த விமானம், பறவையை மோதி அவசரநிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அக்தௌ விமான நிலையத்திற்கு திரும்பியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக ரஷ்யாவின் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இதனிடையே, இம்மாதம் 26-ஆம் தேதி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது.

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக சேவையாற்றிய அவர், சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராக போற்றப்பட்டதுடன் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு அவர் வகுத்த பல கொள்கைகள் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தன.

டிசம்பர் 29-ஆம் தேதி, தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற Jeju Air விமானம், தென் கொரியாவில் உள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில், சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 151 பலியாகினர்.

கடந்த, 30 ஆண்டுகளில் தென் கொரிய விமான நிறுவனம் தொடர்பான விபத்துகளில் இதுவே மிகவும் மோசமான விபத்தாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)