பொது

திரெங்கானு, கிளாந்தானில் சீரடைந்து வரும் வெள்ள நிலைமை

30/12/2024 06:10 PM

கோலாலம்பூர், 30 டிசம்பர் (பெர்னாமா) - இன்று மாலை நிலவரப்படி, திரெங்கானுவிலும் கிளாந்தானிலும் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது.

மேலும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இன்று காலையில் அம்மாநிலத்தில் 177 குடும்பங்களைச் சேர்ந்த 651 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாலையில் அந்த எண்ணிக்கை 63 குடும்பங்களைச் சேர்ந்த 238ஆக குறைந்தது.

தற்போது அங்கு பெசுட் மாவட்டத்தில் மட்டுமே தற்காலிக நிவாரண மையம் செயல்பட்டு வருவதாக திரெங்கானு மாநிலத்தின் பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் செயலகம் தெரிவித்தது.

அம்மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், ஐந்து நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனிடையே, கிளந்தானில் இன்று காலை 267 குடும்பங்களைச் சேர்ந்த 882 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மாலையில் அந்த எண்ணிக்கை 194 குடும்பங்களைச் சேர்ந்த 623ஆக குறைந்தது.

அதில் தானா மேராவிலேயே அதிகமானோர், அதாவது 193 குடும்பங்களைச் சேர்ந்த 621 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாவும், அவர்கள் ஒன்பது நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நலத்துறை ஜே.கே.எம்மின் பேரிடர் தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)