கோலாலம்பூர், 08 ஜனவரி (பெர்னாமா) -- உணவு உத்தரவாதத்தை உட்படுத்திய விவகாரங்களைக் கையாளும் பொருட்டு, செயற்கை நுண்ணறிவு, AI மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் விவசாயத் துறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
காலமாற்றத்திற்கு ஏற்ப, விவசாயிகளும் இத்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அறிந்திருக்க வேண்டும் என்று, REDtone நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் ரெட்சா இம்ரான் டத்தோ அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
''இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் அதைச் செய்யக்கூடிய ஒரு வழியாகும். மேலும் இந்த தொழில்நுட்பங்கள் மலிவான விலையில் கிடைப்பதால், நமது விவசாயிகள் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தப் புதிய தொழில்நுட்பங்களான விவேக விவசாயம், விவேக பாசனம், விவேக உரமிடுதல், விவேக பூச்சிக்கொல்லி தெளித்தல், நமது அமைப்புகளின் விவேக கண்காணிப்பு போன்றவற்றை விவசாயிகள் மிக விரைவாக பின்பற்ற அனுமதிக்கும் கொள்கைகளை அரசாங்கம் வழங்கத் தொடங்க வேண்டும்,'' என்றார் அவர்.
தேசிய அளவில் பயிர் விளைச்சலைக் கண்காணிக்கும் பொருட்டு, நாட்டில் 'தேசிய விவசாய முகப்பு' இருக்க வேண்டும் என்று ரெட்சா இம்ரான் கூறினார்.
இதன்வழி, குறைந்தளவிலான கையிருப்பு மற்றும் விலை உயர்வு சிக்கல்கள், குறிப்பாக பண்டிகை காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருப்பதைத் தடுக்க முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
“ஒரு நாடாக நாம் இந்தத் தரவுகளை அதாவது விவசாயத் தரவுகளை நிறைய சேகரித்து வருகிறோம் என்று நினைக்கிறேன். விவசாய ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களை அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நேரம் இது. தொழில்துறையை முன்னோக்கி நகர்த்துவதற்கு அந்தத் தரவைப் பயன்படுத்த வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு அனைத்துலக ஒழுங்குமுறை மாநாட்டில், ‘Harnessing Technology for Food Security: Advancing Solutions for Global Challenges’ எனும் கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Redza Imran அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)