பொது

எச்.எம்.பி.வி கிருமித் தொற்று குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம்

08/01/2025 07:37 PM

கோலாலம்பூர், 08 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கொவிட்-19 நோய்த் தொற்று, என்டமிக் எனப்படும் முடிவில்லாத் தொற்று நிலைக்கு மாறி அதனுடன் வாழத் தொடங்கி நாம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்டோம்.

இந்நிலையில், சுவாசக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் எச்.எம்.பி.வி எனப்படும் 'Human Metapneumovirus' என்ற கிருமித்தொற்று, நாட்டில் பரவி வருவதுடன் மக்கள் மத்தியில் மீண்டும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக்கிருமித் தொற்று குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம், மாறாக விழிப்புணர்வை கொண்டிருப்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றார், குவாலிடாஸ் எஸ்வி கேர் சிகிச்சையகத்தின் குடும்ப நல மருத்துவர் டாக்டர் சங்கீதா நாகராஜன்.

எச்.எம்.பி.வி கிருமித்தொற்று மலேசியாவில் புதிய நோய் அல்ல மாறாக, கடந்தாண்டு முழுவதிலும் 327 பேருக்கு இந்நோய் கண்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

காற்றின் மூலம் எளிய முறையில் பரவக்கூடிய இக்கிருமி தொற்று, கொவிட்-19-யைப் போன்று ஒருவரின் சுவாசக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டிருப்பதாக டாக்டர் சங்கீதா நாகராஜன் விளக்கினார்.

''இந்த கிருமித்தொற்று எப்படி பரவும் என்றால் காற்றின் மூலம். இரும்பல் அல்லது தும்பல் வரும்போது இது பரவலாம். அல்லது ஒருவரை ஒருவர் தொடும்போது. உதாரணத்திற்கு ஒருவருடன் கைக்குளுக்கும் போது அல்லது உணவுகளைப் பரிமாறிக் கொள்ளும்போது இந்த நோய் பரவ வாய்ப்புகள் உள்ளன,'' என்றார் அவர்.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் எச்.எம்.பி.வி கிருமித்தொற்று, அனைத்து வயதினர்களையும் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் சங்கீதா தெரிவித்தார்.

எனினும், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பவர்களை, எளிதில் பாதிக்கும் என்பதால் அவர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

''இந்த நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன. முதல் சில அறிகுறிகள், காய்ச்சல், சளி, இரும்பல், தொண்டை வலி வர வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய்க்கு அதிக ஆபத்தான வயது வரம்பு ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள குழு மற்றும் அறுபத்து ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழு, இந்த நோய்க்கு மிகவும் ஆபத்தான முறையில் இருக்கின்றனர். ஆனால், இந்த நோய் அனைத்து வயதினர்களுக்கும் வர வாய்ப்புகள் இருக்கின்றது,'' என்று டாக்டர் சங்கீதா குறிப்பிட்டார்.

இதனிடையே, தொற்று நோய்ப் பரவும் சூழ்நிலையை எதிர்கொண்ட அனுபவம் மலேசியாவுக்கு இருக்கும் நிலையில், தற்போது மக்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்நோயை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து சிந்திப்பது மட்டுமே என்றும் அவர் விவரித்தார்.

மேலும், இக்கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சில வழிமுறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

''முதலில் முக கவசம் அணிவது மிகவும் அவசியம். இரண்டாவது, நமக்கு அறிகுறிகள் இருந்தால் சளி, இரும்பல் போன்றவை இருந்தால் வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளேயே இருப்பது சிறப்பு. அந்த சூழ்நிலையில் நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் முகக் கவசம் அணிவது மிகவும் அவசியம். மூன்றாவது, கைகளை எப்பொழுதும் நன்கு கழுவ வேண்டும். இதுபோன்ற தற்காப்பு அம்சங்கள் நமக்கு பல வகையில் உதவியாக இருக்கும்,'' என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் எச்.எம்.பி.வி எனப்படும் 'Human Metapneumovirus' என்ற கிருமித்தொற்று குறித்து பெர்னாமாவின் நலம் வாழ அங்கத்திற்காக தொடர்பு கொண்டபோது டாக்டர் சங்கீதா நாகராஜன் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)