கோலாலம்பூர், 09 ஜனவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு அறிமுகம் காணவிருக்கும் 13-ஆவது மலேசிய திட்டத்தை வரைவதில், அரசாங்கம் அனைத்துலக அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.
உலக அரங்கில் மலேசியா சிறந்த பங்கு வகிப்பதற்கு, மாறிவரும் உலகளாவிய சூழலுக்கு ஏற்ப முழுமையான பரிசீலனை தேவைப்படுவதாக பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.
''உலகளாவிய சூழல் மாறி வருவதுடன், அனைத்து தரப்பினரிடமிருந்தும் கூடுதலான சிந்தனை மாற்றம் வேண்டும் என்பதை இது குறிக்கின்றது. மேலும், மலேசியா போன்ற சிறிய, திறந்த மற்றும் அணிசேரா (சோனா) நாடுகள், தற்போது எதிர் திசையை நோக்கிச் செல்வதால் சுயவிவரம், அணுகுமுறை மற்றும் பார்வை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியா பொருளாதார மாநாட்டில் பேசிய ரஃபிசி அவ்வாறு கூறினார்.
மேலும், வரும் ஆண்டுகளில் நாட்டை தனித்துவமான முறையில் வடிவமைக்கும் வகையில், மலேசியாவும் தென்கிழக்கு ஆசியாவும் சிறந்த வேறுபாடுகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, வருகின்ற பத்தாண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரம் 4 முதல் 5 விழுக்காடு வரை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், 66 கோடியே 50 லட்சம் மக்கள்தொகையுடன், தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு உலகப் பொருளாதாரத்தில் நான்காவது பெரிய நிலையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)