பொது

சரவாக் மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையத்தை நிறுவ ஜப்பான் ஆதரவு

10/01/2025 04:47 PM

புத்ராஜெயா, 10 ஜனவரி (பெர்னாமா) - மலேசியாவை, குறிப்பாக சரவாக் மாநிலத்தை இவ்வட்டாரத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஹைட்ரஜனுக்கான மையமாக மாற்றுவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் உறுதிபூண்டுள்ளது.

மே மாதத்திற்குள் திட்டமிடப்பட்டிருக்கும் கூட்டத்தில் இந்த ஒத்துழைப்பு குறித்து இறுதி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

சரவாக்கில் ஹைட்ரஜன் துறையில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த புதிய முயற்சி  Petroleum Sarawak நிறுவனம் பெட்ரோஸ் மற்றும் பெட்ரோனாஸ் இடையிலான ஒத்துழைப்பை உள்ளடக்கியிருக்கும்.

"உங்களை சந்தித்த சரவாக் முதலமைச்சர் அந்த உறுதிமொழியை வழங்கினார். பிரதமர் இஷிபாவின் ஆதரவோடு புதிய தொழில்நுட்பம் மற்றும் ஹைட்ரஜனில் இந்த ஒத்துழைப்பு வெற்றி பெறும் என்று நம்புகிறோம். தோக்கியோ அல்லது கோலாலம்பூரில் சந்திக்க மே மாதத்திற்குள் சில காலக்கெடுவை எட்டுவதற்கு, விரைவில் இதை எளிதாக்குவோம் என்று நம்புகிறோம்," என்றார் அவர்.

மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதமர் ஷிகிரு இஷிபாவுடன் நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பு கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அன்வார் அவ்வாறு கூறினார்.  

சரவாக், தீபகற்பம் மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் ஆசியான் மின் கட்டத்தின் உருவாக்கத்திற்கு ஜப்பான் போன்ற நாடுகளின் நிபுணத்துவ ஆதரவு தேவைப்படுவதாக, அன்வார் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)