ஜோகூர் பாரு , 14 ஜனவரி (பெர்னாமா) -- GISBH நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி நசிருடின் முகமட் அலி மற்றும் அவரது மனைவி அசுரா முகமட் யுசோப் ஆகிய இருவரும் கடந்தாண்டு அக்டோபரில் சமர்ப்பித்த ஆட்கொணர்வு மனுவை ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் சட்டம், 2012 சொஸ்மாவின் கீழ், தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக அவ்விருவரும் இந்த விண்ணப்பத்தைச் செய்திருந்தனர்.
இந்நிலையில், தவறாக தடுத்து வைத்திருப்பதால், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களின் விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நசிருடின் மற்றும் அசுரா தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினரின் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ வாதங்களை ஆராய்ந்த பின்னர், இவ்விவகாரம் நீதிமன்றத்திற்குச் சாதகமாக இல்லை என்பது கண்டறியப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக நீதிபதி டத்தோ அபு பாக்கார் கட்டார் தெரிவித்தார்.
இதனிடையே, ஆட்கொணர்வு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அடுத்த வாரம் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு தாம் பிரதிநிதிக்கும் நசிருடின் மற்றும் அசுராவிடமிருந்து உத்தரவு கிடைத்ததாக வழக்கறிஞர் டத்தோ ரொஸ்லி கமாரூடின் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)