கோலாலம்பூர், 13 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி புஸ்பாகோம் எனப்படும் 37 கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையங்களில் சாலை போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 21 வர்த்தக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புஸ்பகோம் அங்கீகரித்த லாரி ஒன்றின் வெளிப்புறத் தோற்றம், வாகன பாதுகாப்பு தரத்தைப் பின்பற்றாததும் கண்டறியப்பட்டதாக ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் டத்தோ எடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
போலி மோட்டார் வாகன வர்த்தக உரிமம், பதிவு செய்யப்படாத வாகனப் பயன்பாடு, காலாவதியான மோட்டார் உரிமம், காலாவதியான காப்புறுதி மற்றும் வேறொரு நிறுவனத்தின் மோட்டார் வாகன வர்த்தக உரிமத்தை பயன்படுத்துதல் போன்ற குற்றங்களும் இச்சோதனை நடவடிக்கையில் கண்டறியப்பட்டன.
இக்குற்றங்கள் தொடர்ந்து ஏற்படுவதைத் தவிர்க்க, சட்டம் 333 செக்ஷன் 64
உட்பிரிவு (1)-இன் கீழ் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் மற்றும் அதன் கீழ் உள்ள விதிமுறைகளைப் பின்பற்ற தவறும் வர்த்தக வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிறப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
புஸ்பகோமில் முதற்கட்ட சோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பு, சோதனையின்போது மற்றும் அதன் பின்னரும், வணிக வாகனங்களில் பாதுகாப்பை உறுதிசெய்து தொழில்நுட்பக் கோளாறுகளைத் தடுக்கவும், இந்த சிறப்பு சோதனை நடவடிக்கை வழிவகுக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)