பாகான் டத்தோ, 12 ஜனவரி (பெர்னாமா) - தேங்காய்ப் பயன்பாடு இன்றி இந்தியர்களின் சுப நாட்களும் சடங்கு சம்பிரதாயங்களும் முழுமை பெறாது என்றால் அது மறுப்பதற்கில்லை.
தேங்காயின் மேலுள்ள ஓடு கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் கொப்பரை வெள்ளை நிறத்தில் இருப்பதைப் போன்று பக்தர்களின் எண்ணம் தூய்மையாகவும் ஈர மனதோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஆலயங்களில் தேங்காய் உடைப்பார்கள்.
சிறப்பு அம்சங்கள் நிறைந்த தேங்காயின் விளைச்சல், தென்னை பராமரிப்பு மற்றும் அதன் வியாபார நுணுக்கங்கள் குறித்த சந்திப்பு ஒன்று பொங்கல் சிறப்பு தொகுப்பாக இடம்பெறுகிறது.
தென்னந் தோப்பு உருவாக்கத்திற்கு தென்னங்கன்றுகளை நடுவது வழக்கமான நடவடிக்கையாக இருந்தாலும், சில வேளைகளில் தென்னை மரங்களில் இருந்து விழும் முற்றிய தேங்காய்களும் மண்ணில் புதைந்து ஆறு மாத காலத்திற்கு பின்னர் முளைத்து மரமாகும் என்று...
பேராக், பாகான் டத்தோவில் உள்ள கோலா பேராக் தோட்டத்தில் கடந்த 1970-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தென்னை மர விளைச்சல் மற்றும் தேங்காய், இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வரும் 72 வயதான முத்தையா சுப்ரமணியம் தெரிவித்தார்.
"இப்போதுள்ள நவீன காலத்தில் பெரும்பாலும் இந்த முறையை விடுத்து Polination எனப்படும் மகரந்த சேர்க்கை முறையைப் பயன்படுத்துகின்றனர். முற்றிய தேங்காயைக் கொண்டு சென்ற அதைப் பதியம் செய்து அதற்கு உரமிட்டு சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு அந்த செடி வளர்ந்த பின்னர் அதை போலி பைகளில் வைத்து அதை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுவரை பரமாரிக்கின்றனர். அது குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும் அதை எடுத்து மண்ணில் நடுகின்றனர். அது இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நன்கு வளர்ச்சி காய் காய்க்க தொடங்கிவிடும்," என்று அவர் விவரித்தார்.
முன்பெல்லாம் மரத்தின் ஒரு குலையில் 20 தென்னங்காய் இருந்த நிலையில், தற்போது சீதோஷண மாற்றத்தால் ஒரு குலையில் ஐந்து காய்கள் காய்ப்பதே அரிதாக உள்ளதாக அவர் கூறினார்.
சில தோப்புகளில் நட்டு வைக்கப்பட்டிருக்கும் MALAYSIAN TALL மரங்கள் 60, 70 ஆண்டுகளாக இன்னும் குலை தள்ளி வரும் வேளையில், தாம் நட்டு வைத்திருக்கும் மரங்களின் ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே என்றும் முத்தையா கூறினார்.
மேலும் ஒரு மரத்திலிருந்து பறித்து உரிக்கப்பட்ட தேங்காய், குறைந்தது பத்து நாட்கள் வரை மட்டுமே பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும் என்று கூறிய அவர், தென்னை மரங்களுக்கு ஏற்படும் உபாதைகள் குறித்தும் விவரித்தார்.
"எங்கிருந்தோ வந்த ஒருவகை வண்டு தென்னங் குருத்தில் நுழைந்துவிடும். அந்த வண்ணம் மெல்ல மெல்ல அந்த மரத்தினை அரித்து கொண்டே வந்து இறுதியில் முற்றாக அதன் ஆயுளை முடக்கிவிடும். அதேபோன்று மற்றொரு பூச்சியினம் உள்ளது. அந்த குருத்தோலையின் இலைகளை மட்டும் மெல்ல மெல்ல சாப்பிட்டுக் கொண்டே வரும். அவ்வாறு சாப்பிட்டுக் கொண்டே வந்தால் வெறும் தண்டு மட்டுமே மிஞ்சும். சில வேளைகளில் இடி இடிக்கும் போது, ஒரு நேரத்தில் பத்து மரங்கள் மொத்தமாக தாக்கப்படும். இதைத் தவிர்த்து அணில் குரங்களின் படையெடுப்பும் மரத்தையும் தேங்காய்களையும் சேதப்படுத்தும்," என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய நிலநிதி கூட்டுறவுக் கழகத்தின் நிலத்தில் சுமார் 25 ஏக்கர் அளவில் குத்தகைப் பெற்றே தாம் இத்தொழிலை செய்து வருவதாக முத்தையா கூறினார்.
இதற்கான மருந்து, உரம், டிரக்டருக்கான டீசல் செலவு என அனைத்தையும் தோட்ட நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் வேளையில் காய் பறிப்பது, மட்டை வெட்டுவது, இடத்தை சுத்தமாக வைத்து கொள்வது ஆகியவற்றை மட்டுமே தமது தரப்பு மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
"மாத்தாக் வகையிலான தேங்காய்களை ஒரு ரிங்கிட் 45 சென்னுக்கு விற்பனை செய்ய தோட்டம் விலை நிர்ணயித்துள்ளது. நாங்கள் காய் பறிப்பது, அதை கொண்டு செல்வதற்கான டிரக்டர் செலவு, அதை லாரியில் ஏற்றி வெளியே கொண்டு செல்வது போன்ற அனைத்து செலவுகளுக்குமாக சேர்த்து ஒரு காய்க்கு இருபது சென் வரை ஆதாயம் பார்ப்போம். அவ்வாறு செய்தால் மட்டுமே அனைத்து செலவுகளையும் அதில் உட்படுத்த முடியும். காய்கள் எவ்வளவு அதிகரிக்கிறதோ அதற்கு ஏற்றார்போன்று எங்களால் ஆதாயத்தைப் பார்க்க முடியும்," என்றார் அவர்.
வாழை, வெற்றிலைப் போன்று தென்னைக்கான தேவையும் எப்போதும் குறையாது என்பதால் இந்த அழிவில்லா வியாபாரத்தில் இந்திய இளைஞர்கள் அதிகளவில் கால்பதிக்க வேண்டும் என்ற தமது ஆவலையும் ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையான தொழிலதிபர் முத்தையா சுப்பிரமணியம், பெர்னாமா தமிழ்செய்தியின் சிறப்பு நேர்காணலின்போது வெளிப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)