புக்கிட் துங்கு, 13 ஜனவரி (பெர்னாமா) -- கட்டாய இடைநிலைக் கல்விக் கொள்கையைக் கல்வி அமைச்சு, வரும் பிப்ரவரி மாதத்தில் மக்களவையில் தாக்கல் செய்யும்.
நாட்டில் மாணவர் வருகையின்மை மற்றும் இடைநிற்றல் பிரச்சனைகளைக் களைவதற்கான அமைச்சின் முயற்சிகளில் அக்கொள்கையும் ஒன்றாகும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் எடுத்துரைத்தார்.
எஸ்.பி.எம் தேர்வு போன்ற முக்கியமான சோதனைகளின் போது, மாணவர்களின் வருகையின்மை பிரச்சனையைத் தடுப்பதற்கும் இம்முயற்சி வழிவகுக்கும் என்றும் ஃபட்லினா சிடேக் கூறினார்.
''அதனால்தான், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், கட்டாய இடைநிலைக் கல்விக் கொள்கை தாக்கல் செய்வது கல்வி அமைச்சின் மற்றொரு முயற்சி ஆகும். எனவே, மாணவர்களின் வருகையின்மை, இடைநிற்றல் மற்றும் நாட்டில் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய சிக்கல்களை அவை களையும் என்று நாங்கள் நம்புகிறோம், '' என்றார் அவர்.
இன்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் பள்ளிகளுக்கான தொடக்க உதவி நிதி, பிஎபி காசோலையை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது, கட்டாய இடைநிலைக் கல்விக் கொள்கை, தேசிய சட்டத்துறை அலுவலகம், ஏ.ஜி.சியில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஃபட்லினா குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)