செர்டாங், 13 ஜனவரி (பெர்னாமா) -- MITAP எனப்படும் மலேசிய இந்திய உருமாற்ற விவசாயத் திட்டத்தின் கீழ், விவசாய மேம்பாட்டு உதவிநிதி மற்றும் இளம் விவசாயி தொழில்முனைவோர் ஆகிய இரு திட்டங்களுக்கு, இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா விண்ணப்பங்களைத் திறந்துள்ளது.
விவசாயத் துறை சுற்றுச்சூழல் அமைப்புடன் இந்திய விவசாய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கத்தில் அதற்கு, 38 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மித்ரா சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், MARDI உடன் இணைந்து நடத்தப்படும் இத்திட்டம், அதிக போட்டித்தன்மை கொண்ட இந்திய விவசாய தொழில்முனைவோரை உருவாக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு முயற்சி என்று பிரபாகரன் பரமேஸ்வரன் கூறினார்.
தகுதிப் பெறும் 100 பங்கேற்பாளர்களில் 70 பேருக்கு ஆறு மாதங்களுக்கு மார்டியின் வழிகாட்டுதலுடன், 30,000 ரிங்கிட்வரை உதவி நிதி வழங்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதோடு, இளம் விவசாயி தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 30 பங்கேற்பாளர்களுக்கு 10 மாத விவசாயப் பயிற்சியும், மூன்றாம் நிலை மலேசிய திறன் சான்றிதழும் வழங்கப்படும் என்று பிரபாகரன் விவரித்தார்.
இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை மித்ராவின் அகப்பக்கத்தில் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]