பொது

தெக்குன் நேஷனல் மூலம் 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

14/01/2025 08:17 PM

சுங்கை பூலோ, 14 ஜனவரி (பெர்னாமா) --   இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தெக்குனின் மூலம் 10 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் அறிவித்துள்ளது.  

2025-ஆம் ஆண்டுக்கான மடானி வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று கோடி ரிங்கிட்டில், தற்போது கூடுதலாக ஏழு கோடி ரிங்கிட் சேர்க்கப்பட்டிருப்பதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தெக்குனிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அக்கூடுதல் நிதி, அதன் கீழ் செயல்படும் ஸ்பூமியின் மூலம் ஐந்து கோடியும், ஸ்புமி கோஸ் பிக் வாயிலாக ஐந்து கோடியும் விநியோகிக்கப்படும் என்று, டத்தோ ஶ்ரீ ரமணன் தெளிவுப்படுத்தினார்.

''இந்த 100 மில்லியன் இரண்டு வகையாக உள்ளது. ஒன்று, ஸ்புமி. ஸ்புமியின் மூலம் 50 மில்லியன் நாங்கள் ஒதுக்கியுள்ளோம். அந்த 50 மில்லியன் ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 50 ஆயிரம் ரிங்கிட் வரை நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். அது ஸ்புமி திட்டத்தின் கீழ். ஸ்புமி கோஸ் பிக் திட்டத்தின் மூலம் நீங்கள் 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேல் ஒரு லட்சம் வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம்'', என்று அவர் கூறினார்.

மேலும், ஒதுக்கப்பட்ட இந்நிதிகள் அனைத்தும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு நேரடி பலன்களைத் தருவதோடு, வணிக உலகில் அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக, ரமணன் கூறினார்.

அதேவேளையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ பின் தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் அக்கறையையும் உறுதியையும் இம்முயற்சி பிரதிபலிப்பதாக, அவர் குறிப்பிட்டார்.

''2008-ஆம் ஆண்டில் தெக்குன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, இந்த 15 ஆண்டுகள் முழுவதும் தெக்குன் கடனுதவியை முழுமையாக மக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த கடனுதவி நம்முடைய சமுதாயத்திற்கு மிகவும் தேவை. அதனால்தான், அந்த தொகையை நாங்கள் 10 கோடி ரிங்கிட்டாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம்'', என்றார் அவர்.

எனவே, முறையான ஆவணங்களைக் கொண்டு தெக்குனின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது அருகில் உள்ள தெக்குன் அலுவலகத்தில் நாளை தொடங்கி இந்திய சமுதாயம் இந்நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக அவர், சுங்கை பூலோவில் உள்ள தேவி ஶ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வணக்கம் மடானியின் ஏற்பாட்டிலான பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)