லண்டன், 14 ஜனவரி (பெர்னாமா) -- ஐக்கிய அரபு சிற்றரசுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அலுவல் பயணத்தை அடுத்து ஐரோப்பிய நாடுகளில் மலேசியாவுடன் மூன்றாவது மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கும் இங்கிலாந்துக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் ஐந்து நாள்கள் அலுவல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கடந்தாண்டு ஜூலை மாதத்திலிருந்து இங்கிலாந்து பிரதமராகப் பதவி வகித்து வரும் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பை ஏற்று அன்வார் அங்கு செல்லவிருப்பதாக இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்துக்கான மலேசிய தூதர் டத்தோ சக்ரி ஜாஃபர் தெரிவித்தார்.
''2022ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆசியான் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமும் இதுவாகும், '' என்றார் அவர்.
இந்தப் பயணம் மலேசியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இருவழி உறவுகளுக்குப் புத்துயிர் அளித்து மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லண்டனில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சக்ரி கூறினார்.
அபுதாபியிலிருந்து உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு மணி 10க்கு அதாவது மலேசிய நேரப்படி புதன்கிழமை காலை மணி 6க்குப் பிரதமர் லண்டன் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)