மெல்பர்ன், 14 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் இரண்டாம் ஆட்டத்திற்கு அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் தேர்வாகினார்.
இன்று நடைபெற்ற முதலாட்டத்தில் உலகின் நான்காம் நிலை ஆட்டக்காரரான அவர், தமது சகநாட்டவரான ஜென்சன் புரூக்ஸ்பியுடன் விளையாடினார்.
இவ்வாட்டத்தில் எவ்வித சிக்கல்களையும் எதிர்கொள்ளாத டெய்லர் ஃப்ரிட்ஸ், 6-2 6-0 6-3 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.
கடந்த 22 ஆண்டுகாலமாக அமெரிக்க ஆடவர் பிரிவு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதில் தோல்வி கண்டு வரும் நிலையில் அதற்கு டெய்லர் ஃப்ரிட்ஸ் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்பப்படுகிறது.
ஆடவருக்கான மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் பிரிட்டனின் கேமரூன் நோரி, மெத்தியு பெரெட்டினியுடன் விளையாடினார்.
இவ்வாட்டத்தில் முதல் செட்டில் இத்தாலியின் மெத்தியு பெரெட்டினி 6-7 என்று தோல்வி கண்டாலும் அடுத்த மூன்று செட்களில் 6-4 6-1 6-3 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.
மகளிருக்கான ஒற்றையர் ஆட்டத்தில், பிரிட்டனின் ஏம்மா ராடுகானுவும் ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவும் களம் கண்டனர்.
இவ்வாட்டத்தில் 7-6 7-6 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்ற ராடுகானு இரண்டாம் ஆட்டத்திற்கு முன்னேறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)