ஜாலான் செமாராக், 14 ஜனவரி (பெர்னாமா) -- ரெம்பாவ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் மீதான விசாரணை ஏழு நாள்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர், மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
''நேற்று மாலை மணி 6 வரை, கே.ஜே.விடம் (கைரி) விசாரணை மேற்கொண்டோம். ஆக இம்மாதிரியான விசாரணையை நாங்கள் ஏழு நாள்களுக்குள் நிறைவு செய்வோம்'', என்றார் அவர்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் கூடுதல் ஆவணங்கள் இருப்பதாக கைரி கருத்து தெரிவித்ததால், புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
இவ்விகாரம் குறித்து, சட்ட மற்றும் கழகச் சீர் திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட்டின் அரசியல் செயலாளர் டத்தோ சுராயா யகோப்பும், பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாபாவின் அரசியல் செயலாளர் நோர் அஸ்ரினா சுரிப்பும் முன்னதாக போலீஸ் புகார் அளித்திருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)