சிறப்புச் செய்தி

செல்லினம் 20 ஆண்டுகள் நிறைவு; புதிய முரசு அஞ்சலில் முன்னோடிப் பதிப்பு

14/01/2025 06:42 PM

கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழில் தட்டெழுதும் வாய்ப்பை உருவாக்கிய மலேசியாவை சேர்ந்த முரசு நிறுவனத்தின் செல்லினம் செயலி, இன்று இருபதாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இன்று கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் மற்றும் 20 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு, செல்லினத்தின் கூறுகள் அடங்கிய முரசு அஞ்சல் முன்னோட்டப் பதிப்பினை நீண்டகாலப் பயனர்களுக்கு அந்நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

இதுவரை தமிழில் தட்டெழுதுவதை எளிமையாக்கிய செல்லினத்தின் கூறுகள் அதன் முன்னோடியான முரசு அஞ்சலிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக செல்லினம் முரசு அஞ்சல் செயலிகளின் தோற்றுநர் முத்து நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

''செல்லினத்தில் உள்ள மேம்பட்ட கூறுகளை முரசு அஞ்சலில் சேர்ப்பதற்கான வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டோம். முரசு அஞ்சலின் நாற்பதாம் ஆண்டான இந்த ஆண்டு இதனைப் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக நீண்டகால பயனர்கள் சிலருடன் பகிர்ந்து அதன் கருத்துகளைக் கேட்டறிய புதிய முரசு அஞ்சலின் முன்னோட்ட பதிப்பினை இன்று வெளியிடுகின்றோம். அதன்பின், அனைவரும் பயன்படுத்தி பயனடையும் பதிப்பினை வெளியிடுவோம் என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்,'' என்றார் அவர்.

இதனிடையே, கைப்பேசியில் இருந்து திறன்பேசியாக பரிணாம வளர்ச்சியடைந்தபோது, தன்னை மேம்படுத்திக் கொண்ட செல்லினம், IPHONE, ANDROID என்கிற பேதமின்றி அனைத்துத் திறன்கருவிகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழ்ந்ததாக அவர் கூறினார்.

திறன்பேசிக் கருவியை தங்கள் முதல் மின்னிலக்கக் கருவியாகப் பயன்படுத்திய மக்களுக்குத் தமிழில் தட்டெழுத, செல்லினம் உதவி புரிந்துள்ளது.

பெரும்பாலான திறன்பேசி கருவிகளில் இயல்பாகவே தமிழ் விசைமுகங்கள் இருந்தாலும், அதிகமானோர் செல்லினத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதாக கூறிய முத்து அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

''இதற்கு அடிப்படை காரணம் செல்லினத்தின் எளிமையும் தமிழுக்கு என்றே சேர்க்கப்பட்ட தனிச்சிறப்புகளும்தான். திறன்கருவிகளில் திறம்பட இயங்கி வந்த செல்லினத்தின் கூறுகள் WINDOW MAG கணினிகளில் இயங்காதா என்று பல பயனர்கள் பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். குறுஞ்செய்திகளுக்கு அப்பால் திறன்கருவிகளில் என்னென்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் தமிழில் செய்யலாம் என்ற பெருமையை செல்லினம் நமக்கு தொடர்ந்து தந்துக் கொண்டே வருகின்றது,'' என்றார் அவர்.

பல ஆண்டுகளாக பொங்கல் திருநாளில் புதுப்புது மேம்பாடுகளுடன் பயனர்களுக்கு பயன் தரும் அறிவிப்புகளை வெளியிடுவதன் வழி செல்லினத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)