நிபோங் திபால், 14 ஜனவரி (பெர்னாமா) -- இன்று அதிகாலை, வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் 157.8ஆவது கிலோமீட்டரில் சுங்கை பாக்காப்பிலிருந்து வடக்கு நோக்கிச் சென்ற கனரக லாரியைச் சுற்றுலா பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் அதில் பயணித்த 23 பேர் காயமுற்றனர்.
விபத்துக்குள்ளான அப்பேருந்து நெகிரி செம்பிலானிலிருந்து கெடா, சுங்கைப் பட்டாணியை நோக்கிப் பயணித்ததாக நம்பப்படுகிறது.
இவ்விபத்து குறித்து அதிகாலை மணி 4.16-க்கு தமது தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பினாங்கு மாநில, நடவடிக்கை பிரிவு கொமாண்டர், சைபுல் பஹாரி முகமட் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை சென்றடைந்தவுடன் 24 பயணிகள், ஓர் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் அடங்கிய அச்சுற்றுலா பேருந்து, கனரக லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது.
அச்சம்பவத்தில் 23 பேர் காயமுற்ற நிலையில் அதில் இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.
மேலும் மூவர் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.
இஎம்ஆர்எஸ் எனப்படும் அவசர மருத்துவ மீட்பு சேவைக் குழுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக சுங்கை பாக்காப் மற்றும் செபெராங் ஜெயா மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக சைபுல் பஹாரி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)