கோத்தா பாரு, 15 ஜனவரி (பெர்னாமா) -- இம்மாதம் 13-ஆம் தேதி, கிளந்தான், கோத்தா பாரு, குபாங் கெரியானில் உள்ள கம்போங் சிச்சாவில் மூன்று பாராங் கத்திகளை வைத்திருந்ததாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பகுதி நேர பாதுகாவலர் ஒருவர், இன்று கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி சுல்கிப்லி அப்லா முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 51 வயதுடைய நிக் அசஹார் முஹமட் அதனை மறுத்துள்ளார்.
இம்மாதம் 13-ஆம் தேதி, கிளந்தான், கோத்தா பாரு, குபாங் கெரியானில் உள்ள தாமான் குப் கம்போங் சிச்சாவில், 51, 60 மற்றும் 62 சென்டிமீட்டர் நீலம் கொண்ட மூன்று பாராங் கத்திகளை முறையான நோக்கமின்றி வைத்திருந்ததாக அவ்வாடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1958-ஆம் ஆண்டு, வெடிப் பொருள்கள் மற்றும் அபாயகர ஆயுத சட்டம், செக்ஷன் 7 உட்பிரிவு 1-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர் புகார் அளித்தவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் 8,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில், நிக் அசஹார் முஹமாட்டை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆவணங்களைச் சமர்பிக்க, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்த மாதம் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)