கோலாலம்பூர், 28 ஜனவரி (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஆகியோரின் நெருக்கம், இரு நாடுகளுக்கும் பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களில் சாதகமான நன்மைகளைக் கொடுக்கும்.
அதுமட்டுமின்றி, குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்லாம் தொடர்பில், இரு தலைவர்களின் ஒருமித்த குரல், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் திறன் கொண்டது என்று கல்வியாளர்களும் அனைத்துலக உறவுகள் குறித்த ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
''காசா, இஸ்லாம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நிலைப்பாடு, இந்தோனேசியா-மலேசியாவுக்கான உறவை வலுப்படுத்துகிறது. இது அதிகமாக கேட்கப்படுகிறது. உலகிற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு நல்ல நடவடிக்கையாகும். இந்தோனேசியா-மலேசியா உறவு தொடர்ந்து நீடிப்பதோடு, மேலும் பயன்பெற வேண்டும்,'' என்றார் UiTM தொடர்பு மற்றும் ஊடக ஆய்வுப் புலத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஏ. அசீஸ் அசிஸாம்.
பிரபோவோவிடம் தீர்க்கப்படக்கூடிய இன்னும் பல விவகாரங்கள் இருப்பதை நான் காண்கிறேன். தற்காப்பு ஒத்துழைப்புக்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது, ஒட்டுமொத்தமாக இரு நாடுகளும் ஆசியானுக்கு சிறந்த விஷயங்களைக் கொண்டு வருவதை காண விரும்பும் நம்பிக்கையின் அளவைக் காட்டுகிறது. அதனால்தான், மலேசியாவை ஆசியான் தலைவராக, பிரபோவோ ஆதரிக்கிறார்,'' என்கிறார் புவிசார் உத்தி நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஹசான்.
மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், நேற்று பிரபோவோ மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருந்தார்.
அந்த வருகையின்போது, அன்வாருடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பிரபோவோ, பரஸ்பர நலன் சார்ந்த வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)