காசா, 16 ஜனவரி (பெர்னாமா) -- காசாவில் சுமார் 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்த வந்த இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இஸ்ரேலும் ஹமாசும் காசாவில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுத்த ஒப்புக்கொண்டதாக கட்டாரின் பிரதமர் ஷேக் முஹமட் அப்துல் ரஹ்மான் அல் தானி அறிவித்திருக்கின்றார்.
பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைப் பலிவாங்கிய போரினை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு இதுவே முதல் படியாகும் என்று ஷேக் முஹமட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
''காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் கைதிகள் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதோடு நிரந்தர போர்நிறுத்தத்திற்கு ஓர் உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில் கூட்டு பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் வெற்றியை அறிவிப்பதில் கட்டார் அரசு, எகிப்து அரபு குடியரசு மற்றும் அமெரிக்காவும் மகிழ்ச்சி அடைகின்றன. இது இரு தரப்பினருக்கும் இடையே நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட வழிவகுத்து நிலையான அமைதியைக் கொண்டு வரும். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு கூடுதலான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணங்களை அது அதிக்கப்படுத்தும், '' என்றார் அவர்.
டோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்ட போர் நிறுத்தம் 42 நாட்கள் நீடிக்கும் என்று தெரிவித்துளார்.
அதோடு, குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக
33 இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதும் அந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கை அமலபடுத்தப்படும் காலகட்டத்தில் இராணுவ நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்று தாம் நம்புவதோடு கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அதனைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் ஷேக் முஹமட் கூறியுள்ளார்.
இதனிடையே, ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கை, தங்களுக்கு எதிரான வன்முறையை இஸ்ரேல் உண்மையிலேயே முடிவுக்குக் கொண்டுவரும் என்று பாலஸ்தீன மக்கள் நம்புகின்றனர்.
இரு தரப்பும் ஒப்பந்தப்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை போர்நிறுத்த நடைமுறைக்காக தாங்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
400 நாட்களாக தொடரும் இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் சுமார் 40,000 பேரின் உயிர்கள் பலியானதோடு கடுமையான பொருட்சேதங்களால் அங்கு மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியும் நிலவியது.
மற்றுமொரு நிலவரத்தில் காசா போர் நிறுத்தம் என்ற செய்தியைக் கேட்டறிந்த மக்கள் வீதி கொண்டாட்டங்களின் வழி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஹமாஸ் - இஸ்ரேல் உடன்படிக்கை ஒப்பந்தத்தைக் காசா நகர் மக்கள் சில மணி நேரங்கள் வாணவேடிக்கைகளோடு வரவேற்றுள்ளனர்.
ஆயினும், மகிழ்ச்சியான செய்திக்கு மத்தியில் கான் யூனிஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனர் கொல்லப்பட்டனர்.
பொது மக்கள் கூடியிருந்த பகுதியில் நடந்த இந்த இத்தாக்குதலில், அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் மூண்டதில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பிலும் பணயக்கைதிகள் பிடித்து வைத்ததை அடுத்து, பாலஸ்தீன மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளைப் பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)