காசா, 03 ஜனவரி (பெர்னாமா) - 2024ஆம் ஆண்டு இறுதியில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக 3,500 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக பாலஸ்தீனிய மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
மேலும், காசா மக்கள் தொகையில் சுமார் 22 விழுக்காட்டினர் தற்போது கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்காக, ஐக்கிய நாடுகளின் அனைத்துலக குழந்தைகள் அவசர நிதி அமைப்பு ,யுனிசெஃப் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.
இலவசமாக மேற்கொள்ளப்படும் இந்த மருத்துவ பரிசோதனைகளின் மூலம் காசா மக்கள் பயனடைந்து வருகிறனர்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை காசா பகுதியில் கிட்டத்தட்ட 15,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூடுதல் தகவலைத் தெரிவித்திருக்கிறது.
சுமார் 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேலுடன் நிகழ்ந்து வரும் போரினால் காசாவின் மக்கள் தொகை 6 விழுக்காடு குறைந்துள்ளது.
55,000க்கும் அதிகமானோர் இறந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில் சூடான் மக்கள் தொகையில் 64 விழுக்காடு அல்லது மூன்று கோடியே 40 லட்ச மக்களுக்கு 2025ஆம் ஆண்டில் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
முந்தைய அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட 2 கோடியே 48 லட்சம் மக்களில் இருந்து மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 23 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்து வரும் ஆயுத மோதல்கள் காரணமாக சூடான் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 60 லட்சம் சிறார்களும் அடங்கியிருப்பதாக ஐ.நா அறிக்கை வெளிட்டுள்ளது.
மேலும் ஒரு கோடியே 14 லட்சம் மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகள் தேவைப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)