சிறப்புச் செய்தி

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயால் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் மரணங்கள் பதிவாகின்றன

22/01/2025 06:27 PM

கோலாலம்பூர், 22 ஜனவரி (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டு உலகளவில் ஏறத்தாழ 660,000 பெண்கள் Cervical Cancer எனப்படும் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம், WHO-வின் தரவுகள் காட்டுகின்றன. 

அவர்களில், சுமார் 50 விழுக்காட்டினர், அதாவது 350,000 பெண்கள் அந்நோயினால் மரணமும் அடைந்தனர். 

இந்தப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வின்மையே மரணங்கள் ஏற்படுவதற்கான முதன்மை காரணம் என்று WHO கூறுகிறது. 

அந்நோய் குறித்த மேலும் சில விரிவான விளக்கங்களை பெர்னாமாவின் நலம் வாழ்வோம் அங்கத்தில் பகிர்ந்து கொள்கிறார் மலேசிய தேசிய புற்றுநோய் கழகத்தின் துணை மருத்துவ இயக்குநர் டாக்டர் விக்னேஸ்வரி சுப்ரமணியம்.

பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோய்களில், மார்பகம், பெருங்குடல், நுரையீரலுக்கு அடுத்து கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் உள்ளது. 

மலேசியாவில், 15-இல் இருந்து 44 வயதிற்குட்பட்ட பெண்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் 2018-ஆம் ஆண்டில் மட்டும் 944 பெண்கள் மரணமடைந்துள்ளனர். 

''கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியில் அதன் வாய் உறுப்பு உள்ளது. அப்பகுதியில் கட்டி, தோல் பிரச்சனை, நீர் அல்லது இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் நிலவினால் இந்நோயிற்கு தொடர்புடையது என்று அர்த்தம்,'' என்றார் அவர்.

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயிற்கும் பிற புற்றுநோய்களைப் போலவே தொடக்க அறிகுறிகள் எதுவும் இருக்காது என்று கூறிய டாக்டர் விக்னேஸ்வரி, சில தொடர் பரிசோதனைகளின் மூலம் அதனை தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டார் .

''30-இல் இருந்து 65 வயதிற்குட்பட்ட பெண்கள் இதற்கான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இரண்டு பரிசோதனைகள் உள்ளன. Pap smear அல்லது HPV DNA Test ஆகும். Pap smear பரிசோதனையை ஒரு மருத்துவர் செய்வார். HPV DNA Test எனும் பரிசோதனையை நாம் சுயமாகவே செய்யலாம். Cotton bud-ஐ அப்பகுதியில் நுழைத்து வெளியே எடுத்து சம்பந்தப்பட்ட கருவியிலிட்டு மருத்துவரிடம் கொடுக்கலாம். Pap smear பரிசோதனையை ஆண்டுக்கு இருமுறை செய்யலாம். HPV DNA Test பரிசோதனையை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை செய்யலாம்,'' என்றார் அவர்.

அந்நோய் குறித்த அறிகுறிகளையும் அவர் இவ்வாறு விளக்குகின்றார்.

''சிறுநீர் அல்லது மலம் தொடர்புடைய பிரச்சனைகள் ஏற்படலாம். சீரற்ற மாதவிடாய் ஏற்படலாம். வெவ்வேறு நிறங்களிலான நீர் வெளியேறலாம். அதில் துர்நாற்றம் வீசலாம். அதோடு, உடலுறவு வைத்துக்கொள்ளும்போது அப்பகுதியில் வலி ஏற்படும்,'' என்றார் அவர்.

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து அதற்கான முறையான சிகிச்சைகள் பெறப்படாத பட்சத்தில் அந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் விளைவுகளும் எளிதானதல்ல.

''கர்ப்பப்பை வாய் சிறுநீர்ப்பைக்கும் மலக்குடலுக்கும் நடுவில் உள்ளது. அதாவது சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும் மலம் கழிக்கும் பகுதிக்கும் நடுவில் உள்ளது. எனவே, அப்பகுதியில் ஏற்படும் கட்டி மேல், கீழ், முன், பின் என அனைத்துப் பகுதிகளுக்கும் பரவும் ஆற்றல் கொண்டது. அந்நோய்க் கண்ட ஒரு பெண் சிறுநீர் அல்லது மலத்தைக் கட்டுப்படுத்த முடியாது. மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்தில் அக்கட்டி எலும்புகளுக்குப் பரவவும் வாய்ப்புள்ளது,'' என்றார் அவர்.

எனவே, எந்தக் கூச்சமும் அச்சமுமின்றி தேவையான சுகாதார பரிசோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ளும்போது எந்தவொரு நோயாக இருந்தாலும் தொடக்கத்திலேயே அதற்கான தீர்வைக் கண்டறிய முடியும் என்று டாக்டர் விக்னேஸ்வரி வலியுறுத்தினார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]