பொது

சட்டம் தெளிவோம் - தனிநபரின் கைப்பேசியைப் போலீஸ் சோதனையிட முடியுமா?

20/01/2025 08:48 PM

கோலாலம்பூர், 20 ஜனவரி (பெர்னாமா) -- ஒரு தனிநபரின் கைப்பேசியைப் போலீஸ் அதிகாரிகள், கண்மூடித்தனமாக  சோதனையிட முடியாது என்று மனித உரிமை ஆணையம், சுஹாகாம் கூறுகிறது.

ஆனால், நியாயமான சந்தேகம் இருந்தால் ஒரு நபரின் கைப்பேசியைச் சோதனையிட போலீசுக்கு அதிகாரம் உள்ளதாக, நடப்பிலுள்ள சில சட்டங்களும் பேசுகின்றன. 

அப்படியானால், அச்சட்டங்களின் வழியாக போலீசுக்கு எதுவரை அதிகாரம் உள்ளது? 

எத்தகைய நிபந்தனைகளை அவை கொண்டுள்ளன? 

மனித உரிமை மீறலுக்கு இதில் தொடர்புள்ளதா? போன்ற கேள்விகள் இதில் வலுக்கும் நிலையில், இவ்வார சட்டம் தெளிவோம் அங்கத்தில் அது குறித்து விளக்கம் அளிக்கின்றார் வழக்கறிஞர் கோகிலா கன்னியப்பன். 

ஒரு தவறு நடந்து, அதன் தொடர்பான விசாரணை தேவைப்பட்டால், நியாயமான காரணங்களுக்கு மட்டுமே ஒரு தனிநபரின் கைப்பேசியைச் சோதனை செய்யவோ..

அல்லது பறிமுதல் செய்யவோ குற்றவியல் நடைமுறை சட்டம் SEKSYEN 23(1), SEKSYEN 116 B, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 247, 248 ஆகியவை வகை செய்கின்றன. 

ஆனால், அந்நடவடிக்கையை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரி கட்டாயம் இன்ஸ்பெக்டராகவோ அல்லது அதற்கும் மேற்பட்ட பதவியிலோ இருக்க வேண்டும் என்பது அச்சட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்று என கோகிலா கன்னியப்பன் கூறினார். 


அதைத் தவிர்த்து, வழக்கமான பரிசோதனை மற்றும் சாலை தடுப்புகளில் பொது மக்களின் கைப்பேசியை போலீசார் சோதனையிட முடியாது என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். 

அதனை மீறி, ஒரு போலிஸ் அதிகாரி அத்தகையை நடவடிக்கையை மேற்கொண்டால், அந்த தனிநபர் சம்பந்தபட்ட அதிகாரியிடம் மேற்குறிப்பட்ட  நிபந்தனைகள் அடிப்படையில் கேள்வி எழுப்ப உரிமை உள்ளதாக கோகிலா குறிப்பிட்டார். 

அதோடு, பதில் கூற மறுத்து போலீசார் கட்டாயத்தின் பேரில் ஒருவரின் கைப்பேசியைச் சோதனையிட்டாலோ அல்லது பறிமுதல் செய்தாலோ, அந்த அதிகாரியின் பெயர், அவரின் போலீஸ் அடையாள அட்டை எண், சம்பவம் நடந்த இடம் ஆகியவற்றை பதிவு செய்து மனித உரிமை ஆணையம் SUHAKAM-மில் புகார் அளிக்கலாம். 

அதனைத் தொடர்ந்து, அந்த அதிகாரியின் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோகிலா விளக்கினார். 

ஒருவரின் கைபேசியும் அதில் உள்ள அனைத்து தகவல்களும் அந்த தனிபருக்கு சொந்தமானது.

எனவே, எந்தவொரு அடிப்படையுமின்றி வற்புறுத்தலின் பேரில், அதனை போலீசார் பரிசோதிக்க முடியாது என்பதை மக்கள் தெளிவில் கொள்ள வேண்டும் என்று பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்டபோது கோகிலா தெரிவித்தார். 


--பெர்னாமா