கோலாலம்பூர், 24 ஜனவரி (பெர்னாமா) -- இன்று அதிகாலை கோலாலம்பூர், கம்போங் பாரு குடியிருப்புப் பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், மலேசிய குடிநுழைவுத் துறை, JIM, அந்நிய நாட்டவர் 38 பேரை கைது செய்தது.
அதிகாலை மணி 2.30-க்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த இச்சோதனை நடவடிக்கையில், 20-இல் இருந்து 50 வயதிற்குட்பட்ட 24 ஆடவர்களும் 14 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
அப்பகுதியில் அந்நிய நாட்டவர் அதிகமானோர் உள்ளதாக, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 35 அதிகாரிகள் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட உளவு நடவடிக்கையைத் தொடர்ந்து, Op Sapu KL Strike Force எனும் சோதனை நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டதாக, Kuala Lumpur JIM இயக்குநர் வான் முஹ்மட் சௌஃபி வான் யூசோப் தெரிவித்தார்.
கைதானவர்களில் 36 பேர் இந்தோனேசியர்கள் என்றும் எஞ்சிய இருவர் தாய்லாந்து பிரஜைகள் என்றும் அச்சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முஹ்மட் சௌஃபி கூறினார்.
ஆவண செயல்முறை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அவர்கள் அனைவரும் கோலாலம்பூர் குடிநுழைவு அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் செக்ஷன் 6(1)(c) மற்றும் செக்ஷன் 15(1)(c)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)