கோலாலம்பூர், 26 ஜனவரி (பெர்னாமா) -- சீனப் புத்தாண்டை முன்னிட்டு நேற்றிரவு, சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே மேற்கொண்ட Op Sepadu சோதனை நடவடிக்கையில் ஒரு லட்சத்து 106 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 124 வாகனங்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதோடு, போலி பதிவு எண்ணை பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் உட்பட எட்டு மோட்டார் சைக்கிள்களும் மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, கோலாலம்பூர் ஜே.பி.ஜே இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத 103 குற்றங்கள், சாலை வரி இல்லாத 70 குற்றங்கள், காப்புறுதி இல்லாத 58 குற்றங்கள், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்படாத வாகன பதிவு எண் பொருத்தியிருந்த 18 குற்றங்கள், வாகனத்தை மாற்றியமைத்த ஒரு குற்றம் மற்றும் வலது, இடது புற கண்ணாடி இல்லாத ஒரு குற்றம் ஆகியவற்றை தங்கள் தரப்பு கண்டறிந்ததாக ஹமிடி அடாம் கூறினார்.
இதில், 253 அபராதங்கள் வெளியிடப்பட்டன.
''இன்றிரவு நடத்தப்படும் சோதனை நடவடிக்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காகும். அதாவது, விவேகமாக வாகனத்தைச் செலுத்தி, பாதுகாப்பாக சென்றடையுங்கள் என்ற சாலைப் பாதுகாப்பு பிரச்சாரத்தின் மூலம் மக்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்த முடியும். குறிப்பாக, அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் பெருநாள் காலத்தில் அதிக விழிப்புநிலை அவசியம்'', என்று அவர் கூறினார்.
இதனிடையே, இதே சோதனை நடவடிக்கையின் மூலம் இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் எண்மரை மலேசிய குடிநுழைவுத் துறை கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)