பட்டர்வெர்த், 27 ஜனவரி (பெர்னாமா) -- 2017இல் இருந்து 2023ஆம் ஆண்டு வரையில் சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கெசோவில் நிரந்தர இயலாமை தொகை கோரல் தொடர்பில் ஐவரை ஏமாற்றிய குற்றங்களை, நிறுவன உரிமையாளர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பினாங்கு, பட்டர்வெர்த் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று அந்நபருக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா முன்னிலையில் வாசிக்கப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளையும், 33 வயதான முஹமட் அஃபிசால் முஹமட் அஃகிருடின் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தனித்தனியே அபராதம் நிர்ணயிக்கப்பட்டு மொத்தமாக ஒரு லட்சத்து 88-ஆயிரம் ரிங்கிட் விதிக்கப்பட்ட நிலையில், முஹமட் அஃபிசால் அவற்றை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
பெர்கெசோவின் நிரந்தர இயலாமை தொகை கோரலின் விழுக்காட்டு நிர்வகிப்பிற்காக முஹமட் அஃபிசாலுக்கு சொந்தமான Jentayu Tujuh Venture எனும் நிறுவனத்தின் Maybank வங்கிக் கணக்கில், அந்த ஐவரும் மொத்தமாக 1 லட்சத்து 88 ஆயிரம் ரிங்கிட்டைச் செலுத்தியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)