சைபர்ஜெயா, 28 ஜனவரி (பெர்னாமா) -- போலி தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதில் ஒன்றாக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி வழி செயற்கை நுண்ணறிவு தகவல் சரிபார்ப்பு உதவியாளர் அல்லது அய்ஃபா-ஆக செயல்படும் 'Chatbot Sebenarnya.my'-ஐ தொடர்பு அமைச்சு அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இந்த 'Chatbox', எழுத்து வடிவிலான எவ்வகையான செய்தியையும் இணையம் வழி சரிபார்க்க அதைப் பயன்படுத்துபவர்களுக்கு உதவும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இத்தளத்தின் வழி மலாய், ஆங்கிலம், மண்டரின், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற அதைப் பயன்படுத்துபவர்கள் நேரடியாக தொடர்புக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
"Sebenarnya.my, பெர்னாமாவின் மற்றும் இதர தரப்பின் கீழ் உள்ள MyCheck போன்ற விரைவில் தகவலைச் சரிப்பார்க்கும் சில தளங்கள் வழி உறுதிப்படுத்தும் செயல்முறையை மேற்கொள்ளலாம். தற்போது, இந்த வசதி எழுத்து வடிவில் வழங்கப்படுகின்றது. ஆனால், (தகவலை) உறுதிப்படுத்த விரைவில் நாம் படத்தையும் அதன் பின்னர் ஒரு காணொளியையும் அனுப்பலாம்,'' என்றார் ஃபஹ்மி.
இன்று, சைபர்ஜெயாவில் நடைபெற்ற 'Chatbot Sebenarnya.my' தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பொது மக்கள் விரைவாகவும் எளிதாகவும் தகவலைச் சரிபார்க்க, இணையம் வழியான போலி தகவல்களுக்கு எதிராக விரைவில் பதிலளிக்க மற்றும் நாட்டில் போலி செய்திகள் பரவுவதைக் கையாள்வதில் Sebenarnya dot my பங்களிப்பை வலுப்படுத்த அய்-ஃபா உதவும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)