உத்தர பிரதேசம், 29 ஜனவரி (பெர்னாமா) -- வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ஏழுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் சுமார் 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பு படையினரும், அவசர சேவை பிரிவினரும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த மிகப்பெரிய திருவிழாவின்போது, சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் சுமார் 50,000 பாதுகாப்புப் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும், அந்தச் சிறியப் பகுதியில் மிகப்பெரிய கூட்டம் கூடுவதால், இவ்விழாவின்போது கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாகும்.
2013-ஆம் ஆண்டில், இத்திருவிழாவின்போது பிரயாக்ராஜில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, மகா கும்பமேலா நடைபெறும் பகுதிகளில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
அதிகாலை தொடர்ந்தே புனித நீராடுவதற்காக வந்திருந்த மக்களைக் கட்டுப்படுத்த போலீசார் முயன்று வருகின்றனர்.
ஆம்புலன்ஸ்கள் கடந்து செல்லவும் சிறப்பு பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இன்று அமாவாசை அனுசரிக்கப்படுவதால், சங்கம் நதிப் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.
குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள் நதியில் நீராடினர்.
புனித நீராடலுக்காக இன்று மட்டும் பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி மக்கள் ஒன்றுக் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)