கோலாலம்பூர், 28 ஜனவரி (பெர்னாமா) -- மாற்றுத்திறனாளிகள் அல்லது மனநலம் குன்றியவர்களுக்கு இருப்பது ஒரு சிறு குறைபாடு மட்டுமே.
சக மனிதர்களைப் போலவே பழகினால், அவர்களின் வாழ்க்கையும் இயல்பாக இருப்பதோடு சமுதாயத்தில் அவர்களுக்கும் தனிமரியாதை கிடைக்கும்.
இது குறித்த விழிப்புணர்வை பொது மக்கள் கொண்டிருந்தால், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் புறக்கணிப்புகளையும் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றார் குறைநீக்கல் போதனையின் முன்னாள் பொறுப்பாசிரியர் அலெக்சாண்டர் சாமிப்பிள்ளை.
கடந்த ஜனவரி 17-ஆம் தேதி திரெங்கானுவில் உள்ள CHUKAI-இல் சந்தை ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவரை, பலர் தாக்கிய, ஒரு நிமிடம் 52 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் பல வகைகளில் நிகழ்வதாக சுட்டிக் காட்டிய அலெக்சாண்டர் சாமிப்பிள்ளை அதற்கான காரணங்களை விளக்கினார்.
''இதற்கு காரணம் பேறுகுறைந்தவர்களை அடையாளம் காண தவறிவிடுவது, இரண்டாவது அவர்கள் பார்ப்பதற்கு ஒரு சாதாரண மனிதரைப் போல் தென்படுவார். ஒரு சிலருக்கு இந்த அம்சங்கள் இருக்கும். அவர் பேறுகுறைந்தவர் என்று யாருக்கும் தெரியாது. இதுபோன்ற காரணங்களால் இச்சம்பவங்கள் நடத்திருக்கலாம்,'' என்றார் அவர்.
மாற்றுத்திறனாளிகளைப் புறக்கணிக்கும் செயல்கள் தொடர்ந்து நடப்பதாக அலெக்சண்டர் குறைப்பட்டுக் கொண்டார்.
இச்செயல் மக்களிடையே விழிப்புணர்வும் பரிவு மனப்பான்மையும் குறைவாக இருப்பதை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு புறம், தங்களின் பிள்ளைகளும் பிறரைப் போன்ற இயல்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் செயல்படுவது பாராட்டுக்குரியது என்றாலும், அதை சில தரப்பினர் தவறாகப் பயன்படுத்திக் கொள்வது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
''இயல்பாக அல்லது அவர் பேறுக்குறைந்தவர் என்று அடையாளம் காண முடியாத அளவிற்கு நல்ல வளர்ப்பினை பெற்ற இந்தக் குழந்தைகள், வெளியே செல்லும்போது, தங்களுக்குரிய சில காரியங்களைச் செய்யும் போது, சமுதாயத்தில் அல்லது கூட்டத்தில் அவர்களை அடையாளம் காணாமல் செய்கின்ற சில காரியங்களைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதும், ஏளனமாக நடத்த முயற்சிப்பதும் சாதாரணமாக நடக்கின்றது,'' என்றார் அவர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் தங்களுக்கான சிறப்பு அட்டையை எப்போதும் உடன் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதோடு, அவர்களின் பாதுகாவலர்களும் பெற்றோர்களும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அலெக்சண்டர்.
''மனநலம் குன்றிய தங்களது பிள்ளைகளுக்கு தங்களது பாதுகாப்பில் இருக்கும் பிள்ளைகளுக்கு சிறப்பு அடையாள அட்டையை கொடுத்து அனுப்ப வேண்டும். அவர்களிடம் அந்த அட்டைகள் இருக்கும் போது பல வசதிகளும் உண்டு. அதே நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் பொழுது அவர் அந்த அட்டையைக் காட்டி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சிரமத்தில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்,'' என்றார் அவர்.
மேலும், பொது இயக்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும், மக்கள் மத்தியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அவர்கள் மீது ஒருவர் செலுத்தும் அக்கறை, மற்றவர்களுக்கும் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்று அலெக்சண்டர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)