பொது

இவ்வாண்டு விமரிசையாகக் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு

29/01/2025 06:36 PM

கோலாலம்பூர், 29 ஜனவரி (பெர்னாமா) -- முந்தைய ஆண்டுகளை விட இவ்வாண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, மலேசியாவின் அடையாளமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தில் சீனாவைச் சேர்ந்த குழு ஒன்று 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்திய நிகழ்ச்சியின் மூலம் இது நிரூபிக்கப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''G2G உறவுகளிலிருந்து மட்டுமல்ல, B2B வணிகத்திலிருந்து வணிகம் மற்றும் மக்களிடமிருந்து மக்களுக்கு என்பதை சீனாவுடனான 50 ஆண்டுக்கால அரசதந்திர உறவை அண்மையில் கே.எல்.சி.சி-இல் சீனாவைச் சேர்ந்த ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட ட்ரோன் நிகழ்ச்சி புலப்படுத்தியுள்ளது,'' என்றார் அவர்.

மலேசிய மற்றும் சீன பிரதிநிதிகளின் அதிகாரப்பூர்வ வருகைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த முடியும் என்றும் டாக்டர் அஹ்மாட் தெரிவித்தார்.

2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டை முன்னிட்டு, அதிகமான சீன சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

புதன்கிழமை, ம.சீ.ச. ஏற்பாட்டில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் டாக்டர் அஹ்மாட் கலந்து கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில் இன்று ம.சீ.ச ஏற்பாட்டில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பிற்கு வருகை புரிந்த டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் உட்பட தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் ஹசான், ம.இ.கா துணை தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் மற்றும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரை ம.சீ.ச தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் வரவேற்றார்.

இக்கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலை 8 மணி முதலே மக்கள் விஸ்மா எம்.சி.ஏ வளாகத்தில் கூடத் தொடங்கினர்.

சிங்க நடனம், பட்டாசு, சீன பாரம்பரிய இசை நிகழ்ச்சி, பல்வகையான உணவு போன்றவற்றுடன் இக்கொண்டாட்டம் களை கட்டியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)