ஸ்ரீஹரிகோட்டா, 29 ஜனவரி (பெர்னாமா) -- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது 100-வது ராக்கெட்டை இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்த ராக்கெட், நிலப்பரப்பு, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமாக தகவல்களைத் தெரிவிக்கும் இஸ்ரோவின் NVS-02 செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
மேகமூட்டமான வானத்தில் சுமார் 19 நிமிடங்கள் பயணித்த பிறகு, அந்த ராக்கெட் சுமந்து சென்ற NVS-02 செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோவின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற நாராயணன் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.
இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான இது, இவ்வாண்டில் இஸ்ரோ விண்ணில் செலுத்திய முதல் ராக்கெட்டும் ஆகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)