பொது

இந்தோனேசியா, ஜகார்த்தாவில் முதல் முறையாக எழுப்பட்டிருக்கும் முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

30/01/2025 08:38 PM

கோலாலம்பூர், 30 ஜனவரி (பெர்னாமா) -- இந்தோனேசியா, ஜகார்த்தாவில் முதல் முறையாக முருகன் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

ஶ்ரீ சனாதான தர்ம ஆலயம், ஜகார்த்தா முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தயார்நிலை பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலயத்தை கட்டவதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதே ஆண்டிலேயே அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கொவிட்-19 நோயினால் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டதால் கட்டுமான பணியில் தடை ஏற்பட்டது.

மீண்டும் 2022ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கிய வேளையில், இன்று வெற்றிகரமாக ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராகியிருப்பதாக ஜகார்த்தா முருகன் ஆலயத்தின் ஆலோசகர் முனைவர் ஏ.எஸ்.கோபாலன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

''எங்களுக்கு சனாதான தர்ம MOVEMENT PEOPLE எனும் அரசாங்க சார்பற்ற நிறுவனம் உள்ளது. அதன் மூலமாக அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி நிலம் விண்ணப்பம் செய்திருந்தோம். அதற்கு அனுமதி அளித்துவிட்டனர். அங்கு ஓர் ஆலயம் கட்டுவதற்கு 32 பரிந்துரைகள் தேவை. சுற்றியிருக்கும் மக்கள் முதல் கவர்னர் வரை. 91 இந்து குடும்பங்கள் கையெழுத்திட்டோம்,''

ஆலயத்தின் சிற்பங்களை இந்தியாவை சேர்ந்த சிற்பிகள் வடிவமைத்திற்கும் வேளையில், ராஜகோபுரம் மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக
முனைவர் கோபாலன் தெரிவித்தார்.

''ஏன் மிகப் பெரிய கோவில் என்றால் அந்தக் கோபுரம் 47 மீட்டர். ராஜகோபுரம் முன்புறம் 21 மீட்டர் திருச்செந்தூர் முருகன் சிலையை வைக்கின்றோம்,'' என்றார் அவர்.

வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி, காலை மணி 7.45 முதல் காலை 11.30-க்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

உள்நாடு மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இக்கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)