கோலாலம்பூர், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்று தொடங்கி அமலுக்கு வந்திருக்கும், 1,500-லிருந்து 1,700 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் மூலம், 43 லட்சத்து 70 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவர்.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தும் முதலாளிகளும், பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், தொழில்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதலாளிகளும், மாதத்திற்கு குறைந்தபட்ச ஊதிய விகிதமாக 1,700 ரிங்கிட்டை, அந்த உத்தரவு நிர்ணயித்துள்ளது.
அதேவேளையில், ஐந்துக்கும் குறைவான பணியாளர்களைக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு, இந்த குறைந்தபட்ச ஊதிய விகிதம் அடுத்த ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி நடைமுறைக்கு வரும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊதிய அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களைச் செய்வதற்கு, முதலாளிகளுக்கு போதுமான அவகாசத்தை அது உறுதி செய்யும்.
அனைத்து முதலாளிகளும் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தைப் பின்பற்றுவதோடு, பணியாளர்கள் மாதத்திற்கு 1,700 ரிங்கிட்டுக்கும் குறையாத அடிப்படை ஊதியம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
குறைந்தபட்ச ஊதிய விகித உத்தரவை கடைப்பிடிக்கத் தவறும் முதலாளிகளுக்கு, சட்டம் 732 அல்லது 2011-ஆம் ஆண்டு தேசிய ஊதிய ஆலோசனை மன்றச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம்.
குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை அமல்படுத்துவது, அமைச்சின் முக்கிய அணுகுமுறைகளில் ஒன்று என்று, முன்னதாக, மனிதவள அமைச்சு, KESUMA தெரிவித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)