உலகம்

துபாய் அனைத்துலக விமான நிலையம்; 9 கோடியே 23 லட்சம் பயணிகளைக் கடந்து சாதனை

01/02/2025 05:52 PM

துபாய், 01 பிப்ரவரி (பெர்னாமா) --   அனைத்துலக பயணங்களுக்கான உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் அனைத்துலக விமான நிலையம், 2024-ஆம் ஆண்டில் 9 கோடியே 23 லட்சம் பயணிகள் எண்ணிக்கையைக் கடந்து சாதனை படைத்ததாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, கொவிட்-19 தாக்கத்திலிருந்து துபாய் மீட்சி கண்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

இது, 2018-ஆம் ஆண்டில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட சாதனையை முறியடித்துள்ளது.

தற்போது மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் இந்த விமான நிலையத்தின் செயல்பாடுகளை, 2032-ஆம் ஆண்டில் நகர-மாநிலத்தின் இரண்டாவது விமான நிலையத்திற்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுமார் 3,500 கோடி டாலர் செலவில் அந்த இரண்டாவது விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துபாய் ஆட்சியாளரான ஷிக் முஹமட் ரஷிட் அல் மக்தோவும் தமது X பதிவில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பான புதிய பதிவு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

கடந்த பத்தாண்டுகளில் 70 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்கு இவ்விமான நிலையம் சேவையாற்றியுள்ளது.

இது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போல் கிரிஃபித்ஸ் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)