கோலாலம்பூர், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- தற்போதுள்ள இணையைப் பிரிப்பது உட்பட இப்போதைக்கு எந்தவொரு மாற்றத்தையும் தாம் மேற்கொள்ளப் போவதில்லை என்று தேசிய ஆடவர் இரட்டையர் தலைமை பயிற்றுநர் ஹெரி இமான் பியெர்ஙாடி தெரிவித்துள்ளார்.
தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு முன்பதாக, அவ்விளையாட்டாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு தமக்கு நேரம் தேவைப்படுவதாக அவர் கூறியிருக்கின்றார்.
தற்போதுள்ள பயிற்சித் திட்டத்தை மாற்றும் எண்ணம் இதுவரை தமக்கு இல்லை என்று இன்று, புக்கிட் கியாராவில் உள்ள மலேசிய பூப்பந்து கழகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தமது பணியைத் தொடங்கிய ஹெரி தெரிவித்தார்.
"உறுதியாக நான் முதலில் பார்க்கவிருக்கிறேன். அவசரமாகச் செய்ய முடியாது. இந்த இணையை மாற்றுவது குறித்து எனக்கு இன்னும் தெரியவில்லை. எனவே, நான் முதலில் பார்க்க வேண்டும். போட்டியிலும் பயிற்சியிலும். இதோடு முடிகிறதா அல்லது இல்லையா என்று. என்னை பொருத்த வரையில் அவ்வளவு சரியில்லை. இப்போதுதான் மாற்றினோம். ஆனால், இப்போதைக்கு இணையை மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. நான் இப்போதுதான் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளேன். நான் பார்க்க வேண்டும். காத்திருப்போம்," என்று அவர் கூறினார்.
2022 உலக வெற்றியாளர்களான ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையினர் தங்கள் பாதையில் நிலையாகப் பயணிக்க தம்மால் உதவ முடியும் என்று ஹெரி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அண்மையில் 2025 இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியின் வெற்றியாளர்களான மான் வெய் சோங் - தீ கை வுன் இணையினரின் செயல்திறனால் தாம் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)