பொது

நிர்வாகப் பணிகள் & சேவைகளில் புதுமையைக் கொண்டு வரும் இயந்திரம்

02/02/2025 04:26 PM

ஷா ஆலம், 02 பிப்ரவரி (பெர்னாமா) --   ஆலயங்களில் வழங்கப்படும் நிர்வாகப் பணிகளிலும் சேவைகளிலும் கால மாற்றத்திற்கு ஏற்ப இலக்கவியலைப் பயன்படுத்தும் நோக்கில், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளில் முன்னோடி நிறுவனமான GRASP SOFTWARE SOLUTIONS, கோவில் நிர்வாக அமைப்பு ஒன்றை, பெர்சியாரான் புடிமான் செக்‌ஷன் 23-யில் உள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், இன்று அறிமுகப்படுத்தியது.

பிரார்த்தனை தொடர்பான செயல்பாடுகள், நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது, கணக்கியல் நிர்வாகம் என பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும், இந்த SELF KIOSK மற்றும் MOBILE APP இயந்திரம் ஏற்படுத்தி கொடுக்கும்.

இந்த கோவில் நிர்வாக அமைப்பின் வழி ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குத் திறமையான நிர்வாகத்தை வழங்குவதுடன், கோயில் நிர்வாகத்தின் பணிச்சுமை குறைக்கப்பட்டு சேவையின் தரம் மேம்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

''இதை ஒரு முக்கிய முயற்சியாக நான் கருதுகின்றேன். ஏனெனில், இது பிரார்த்தனை மற்றும் மேலும் பல ஆலய செயல்முறைகளை எளிதாக்கும். முன்னதாக அமைக்கப்பட்ட இந்த தளத்தைப் பார்த்தோமானால், இது மிகவும் உதவக் கூடியது. மேலும், கட்டணம் செலுத்தும் செயல்முறைகளை இணையத்தின் வழி மேற்கொள்வதன் மூலம் சுலபத்தை ஏற்படுத்தும்'', என்று அவர் கூறினார்.

இன்று, ஷா ஆலம், பெர்சியாரான் புடிமான் செக்‌ஷன் 23 அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டபோது, அவர் செய்தியாளர்களிடம் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, சீனாவின் செயற்கை நுண்ணறிவு, ஏஐ தளமான DeepSeek நாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக, அவர் கூறினார்.

ஏஐ-இன் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப செயல்படுவதில் உள்ளூர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு DeepSeek மற்றும் அதன் சார்ந்த அம்சங்களை இருப்பதை உறுதிசெய்ய, அத்தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன், அரசாங்கம் அதை தீவிரமாக பரிசீலித்து வருவதாக கோபிந்த் சிங் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)