ஜாலான் துவான்கு அப்துல் ரஹ்மான், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை மேற்கொண்ட ஓப் செலாமாட் 23 சோதனை நடவடிக்கையின் வழி 700 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி மாற்றி அமைக்கப்பட்ட 72 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேவேளையில், போலீஸ் அபராதங்கள் 789-உம், சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே அபராதங்கள் 250-உம் வெளியிடப்பட்டன.
சிறிய அளவுடைய சக்கரங்கள் மற்றும் அதிகச் சத்தத்தை உண்டாக்கும் புகைவெளியேற்றக் கருவிப் பொருத்தப்பட்டது உட்பட ஓட்டுநர் உரிமமும் காப்புறுதியும் இல்லாததே முதன்மை குற்றங்களாக இருந்ததாக, கோலாலம்பூர் ஜே.எஸ்.பி.டி தலைவர் ஏ.சி.பி. முஹமட் சம்சுரி முஹமட் இசா தெரிவித்தார்.
"இரவு மற்றும் அதிகாலை நடத்தப்பட்ட இச்சோதனை நடவடிக்கை விபத்துகளைக் குறைக்கும் நோக்கமுடையது. எனவே, நாங்கள் ஒப் செலாமாட் 23 சோதனை நடவடிக்கையை மேற்கொள்கிறோம். கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி (பிப்ரவரி) இரண்டாம் தேதி வரை நடத்தப்படுகிறது. விபத்துகளைக் குறைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்", என்று அவர் கூறினார்.
இன்று அதிகாலை கோலாலம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஓப் செலாமாட் 23 மற்றும் ஓப் சம்செங் ஜாலானான் சோதனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)