ஜோகூர் பாரு, 04 பிப்ரவரி (பெர்னாமா) -- மாட்சிமைத் தங்கிய மாமன்னரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டத்தை ஒப்புக்கொண்ட, ஐந்து பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவருக்கு, ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் 4,000 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
நீதிபதி டத்தோ அஹ்மட் கமால் அரிஃபின் இஸ்மாயில் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 53 வயதுடைய நோர்லி முஹ்மட் யூசோப் ஒப்புக்கொண்டார்.
அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாத சிறை தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.
தையல் உதவியாளராகப் பணிபுரியும் அப்பெண், கடந்தாண்டு டிசம்பர் 11-ஆம் தேதி ஜோகூர் பாரு, பண்டார் ஶ்ரீ ஆலமில், மாமன்னரை அவமதிக்கும் தவறான தகவலை தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் செக்ஷன் 4(1)(a)-இன் அப்பெண் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்..
5,000 ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது அவ்விரண்டு விதிக்க வகைச் செய்யும், அதேச் சட்டம் செக்ஷன் 4(1)-இன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.
அரசு தரப்பு துணை வழக்கறிஞர்கள் அப்துல் ஜஃபார் அப்துல் லத்தீப் மற்றும் லிடியா சாலே இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்ட வேளையில், வழக்கறிஞர்கள் கே.பாரதி மற்றும் பி.ராஜகுணசீலன் குற்றம் சாட்டப்பட்டவரை பிரதிநிதித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)