ஈப்போ, 11 பிப்ரவரி (பெர்னாமா) -- 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேராக், ஈப்போ, கல்லுமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழாவில், நேற்று தொடங்கி நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ நான்கு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு வழக்கத்திற்கு மாறாக, அதிகமான பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி, நேர்த்தி கடன் செலுத்தியதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இத்திருவிழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன், கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு மாநில அரசாங்கத்தின் ஒரு லட்சம் ரிங்கிட் மானியம் வழங்குவதாக அறிவித்தார்.
இன்று காலை தொடங்கி சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் உட்பட அதிகமான பக்தர்கள் மலைக் கோவிலின் அருகில் உள்ள ஆற்றாங்கரையிலிருந்து பால் குடம், காவடிகள சுமந்து தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
மற்றொரு நிலவரத்தில், பேராக், ஈப்போ, கம்போங் கெப்பாயாங் சிவசுப்பிரமணியர் ஆலயத்திலும் தைப்பூச பக்தி மனம் கமழ்ந்தது.
இவ்வாலயத்தில் 129 ஆண்டுகளாக தைப்பூசம் கொண்டாடப்படுவதாக அதன் செயலாளர் கோபி பீமன் கூறினார்.
இவ்வாண்டு சுமார் 30,000 ஆயிரம் பேர் கம்போங் கெப்பாயாங் சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் திரண்டு நிலையில் ஏறத்தாழ 6,000 பேர் பால் குடங்களை ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தியதாக அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]