பொது

பத்துமலையில் வியாபாரச் சந்தைகளில் அலை மோதிய மக்கள் கூட்டம்

17/02/2025 08:33 PM

பத்துமலை, 16 பிப்ரவரி (பெர்னாமா) -- தைப்பூசத்தை ஒட்டி, ஒவ்வோர் ஆண்டும் பத்துமலை கோவில் வளாகத்தில் வியாபாரச் சந்தை திறக்கப்படும்.

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சந்தை இன்றுடன் நிறைவடைகின்றது.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மக்கள் பொருள்களை வாங்குவதற்கு முனைப்பு காட்டியதை பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.

ஆடைகள், பலகாரங்கள், சிலைகள், புத்தகங்கள் மற்றும் பல விதமான பொருள்களை விற்கும் கடைகள் இங்கே போடப்பட்டிருந்தன.

மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தாலும், தங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளில் வியாபாரிகள் கவனம் செலுத்த தவறவில்லை.

அதோடு, மக்களின் ஆதரவு தங்களது வியாபாரத்திற்கு ஊக்குவிப்பாக இருப்பதாக வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.

''அதிகமான மக்கள் வருகை புரிகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தாலும் மக்களை சமாளிக்க முடிகின்றது. எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கின்றனர்,'' என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, இந்தியர்களுக்கான பொருள்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் பட்சத்தில், பொருள்களை மலிவான விலையில் வாங்க முடியும் என்றும் சிலர் கூறினர்.

''கூட்டமாகதான் உள்ளது. அதோடு வெப்பாக உள்ளது. பொருட்களை மலிவான விலையில் வாங்க முடிகின்றது,'' என்று மக்கள் கூறுகின்றனர்.

சில பொருள்களின் விலை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது என்றக் கருத்தும் முன் வைக்கப்பட்டது.

''சில பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக, உணவுகளின் விலை,'' என்று மக்கள் கூறுகின்றனர்.

வார இறுதி நாள் என்பதால், பத்துமலையில் சில பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்திக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது.

''இன்று கூட்டம் அதிகமாக இல்லாததால் திருப்தியாக கடவுளை தரிசனம் செய்தோம். இப்போது பொருட்களை வாங்க செல்கிறோம்,'' என்று சிலர் தெரிவித்தார்.

இந்த வியாபார சந்தையில் சுமார் 300 கடைகள் போடப்பட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)